தியத்தலாவ வீதியை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இன்று (24) அதிகாலை ஹப்புத்தளைக்கும் தியத்தலாவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகளிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்துடன், இப்பகுதியில் உள்ள கராபன்டைன் மரங்கள் மற்றும் பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும், மாற்று வீதியாக தியத்தலாவ உடபர கஹகொல்ல ஊடாக பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன கேட்டுக் கொண்டுள்ளார்.
தியத்தலாவ இராணுவம், தியத்தலாவ பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனர்த்த பிரிவின் குழுக்கள் இணைந்து பிரதான வீதியில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |