நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி - 4 பேர் மாயம்
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் இந்த மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட 142 குடும்பங்களில் உள்ள 506 பேர் பாதுகாப்பான 17 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள், உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவும் ஆபத்தான காலநிலை சூழ்நிலை காரணமாக, மக்கள் தாங்கள் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது அவசியம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் தொடருந்து பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவம் 28.11.2025 அன்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து, நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. மண்சரிவில் காயமடைந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிலர் குடியிருப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்லத் தவிர்க்குமாறு நாவலபிட்டிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், நாவலபிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அபாயங்களுக்கிடையில் சுமார் முப்பது குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam