நாட்டில் சீரற்ற காலநிலையால் 9 பேர் பரிதாப மரணம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றும், வீதிகளில் பாறைகள் விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்நிலையில், 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்பபடி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வளிமண்டல தளம்பல் நிலையினால் நாடு முழுவதிலும் பல நாட்களாக மழை பெய்து வருகின்றது. மாலை நேரங்களில் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாகொடை பகுதி வழியாக வீசிய பலத்த காற்றினால் மாபலகம - காலி பிரதான வீதியில் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் கடும் மழையால் தெனியாய நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு போக்குவரத்தை வழங்கப் பாதுகாப்புப் படையினர் உதவியுள்ளனர். உருபொக்கவின் பத்தன்வல பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாத்தறை - கொட்டபல வீதி முற்றிலும் தடைபட்டுள்ளது.
100 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாத்தறை மாவட்ட நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை இரவு உருபோகு ஓயா பெருக்கெடுத்தமையினால் கட்டுவன நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் களுத்துறை, புலத்சிங்களவில் உள்ள பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam