அயோத்தி தலைமை அர்ச்சகர் தலைமையிலான குழு இன்று தமிழர் பகுதியில்..
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று(24) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெட்விங் விடுதிக்குச் சென்றனர்.
முக்கிய சந்திப்பு
அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட 'சிவன் யாத்திரைப் பாதை' மற்றும் 'இராமாயண யாத்திரைப் பாதை' ஆகிய நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பக்தர்களை ஈர்ப்பதற்கான விஜயம்
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'சிவ யாத்திரைப் பாதையில்' உள்ளடங்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்குவதுடன், ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட 'சிவன் யாத்திரை பாதை' நூலிலும் இவ்வாலயத்தின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் தலைமை அமைப்பாளராகச் செயற்பட்ட சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - தேவந்தன்
இரண்டாம் இணைப்பு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர், இன்று(24.02.2026) விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் - தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர், மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கும் சென்றுள்ளனர்.
மன்னார் விஜயம்
இதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதன் பின்னர், விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, ஆலயத்தையும் சுற்றி குறித்த குழுவினர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ஆஷிக்
முதலாம் இணைப்பு
இந்தியாவின் அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைலாஷானந்த் கிரி ஜி மஹாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர் நேற்று காலை (23.02.2026) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-192) விமானம் மூலம் வருகை தந்த இக்குழுவினரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல்
இக்குழுவினர் இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில் மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதை அம்மன் கோவில், பண்டைய சிவ ஆலயங்கள், ஆகியவற்றுக்கு இவர்கள் செல்லவுள்ளனர்.
தமது விஜயத்தின் போது, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.




