திருகோணமலையில் தேர்தல் மூலோபாய திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்!
2026 - 2029 ஆண்டுக்கான தேர்தல் மூலோபாய திட்டம் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் ஒன்று இன்று(2) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் S. K. D. நிரஞ்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வஜன வாக்குரிமை என்பது மக்களின் உரிமையாகும்.
அந்த உரிமையை பாதுகாப்பதே இவ்வாறான மூலோபாய விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிலையில், மேலும் மக்களின் கருத்துக்களைப் பெற்று, அடுத்த வரும் தேர்தலைகளை நீதியானகவும் சுதந்திரமாக வும், நடாத்துவது எமது அடுத்த கடமையாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில், வெகுசனங்களோடு, தொடர்பாடல் செய்வதும், மிகப்பெரிய நிகழ்வுகளை நடத்துவதும், இலங்கை தேர்தல்கள் திணைக்களம் மட்டுமேயாகும். வர்த்தக நோக்கத்தோடோ, போட்டி தன்மையோடோ இயங்காமல், முழுக்க முழுக்க மக்கள் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவதுதான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவாகும்.
எனினும், இந்தியாவோடு ஒப்பிடும்போது, இலங்கை தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாது. இந்திய பிரதமர் ஹெலிகாப்டரில் ஆகாயத்தில் செல்லும்போதுகூட , அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய தேர்தல் ஆணைய குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அல்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிட்ட, 168 வேட்பாளர்கள் இன்னும் அவர்களுடைய தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் மேலும் தெரிவித்தார். இதன் போது, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. M.ஹேமந்த குமாரவும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு, தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தங்களுடைய மேலான பங்களிப்பை செய்தனர்.