வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவர் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அமைச்சரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுவுடனான கலந்துரையாடலின் படி, இவ்வாறான மோசடிகளை யாராவது எதிர்கொண்டால், உடனே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அது தொடர்பாக தெரியப்படுத்துமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரிய நடவடிக்கை
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தை பெறுவதற்கு, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |