நுவரெலியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பாதயாத்திரை
சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பாதயாத்திரை இன்று (23) சனிக்கிழமை நடைபெற்றது . நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மாநகரசபை மண்டபத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகம் வரை பாதயாத்திரையாக சென்றனர்.
இதன் போது சிறுவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றான துஷ்பிரயோகம் சம்பந்தமான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்தனர் அத்துடன் பாலியல் சுரண்டல் தொடர்பான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையினை முன்னெடுத்தனர்.
'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' பீஸ் அமைப்பானது (PEaCE/ECPAT Sri Lanka) சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டல்களை இல்லாதொழித்தலை தன் பிரதான வேலைத்திட்ட தொனிப்பொருளாக கொண்டு முன்னிலை வகித்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
சிறுவர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதென்பது இன்றைய சமுதாயம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றாகும் எனவும் ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்ச்சியில் நுவரெலியா வலய கல்வி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர் , மகளிர் சம்பந்தப்பட்ட பொது நலன் விரும்பிகள், நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் உட்பட நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.






