விமான போக்குவரத்து மாணவர் முஹம்மது சுஹைல் விடுதலை
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது விமானப் போக்குவரத்து மாணவர் முகமது சுஹைல், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஜூலை 15, அன்று, அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முஹம்மது சுஹைலை கல்கிஸ்சை நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
விசாரணைகள், குற்றத்திற்கான எந்த ஆதாரத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று பொலிஸ் தரப்பு ஏற்கனவே, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான பதிவு
இதனையடுத்து, முஹம்மது சுஹைலின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இல்ஹாம் ஹசனாலி, தனது கட்சிக்காரரை இந்த வழக்கில் தொடர்ந்து பிணைக்க வைப்பது அநீதியாகும் அவரை உடனடியாக வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, முஹம்மது சுஹைலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டார்.
மாவனெல்லயைச் சேர்ந்த முகமது சுஹைல், முதலில் 2024 ஒக்டோபரில், இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் இன்ஸ்டாகிராம் பதிவின் அடிப்படையில் சிறிது நேரத்திலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




