சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
வடக்கு, கிழக்கில் சுயநிர்ணயம், சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்படுத்தி தர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (Gnanamuttu Sirinesan) தெரிவித்துள்ளார்.
கடந்த (1) ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெப்ரவரி நான்காம் திகதி எமது நாட்டின் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.இந்த நேரத்தில் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சுதந்திரம்
சுதந்திரம் என்பது சொற்களாலோ சோடனை கடதாசிகளாலோ, சுதந்திர கீதத்தாலோ அலங்கரிக்கப்படுகின்ற ஒரு காட்சி பொருள் அல்ல.எமது உணர்வு ரீதியாக செயற்பாட்டு ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு விடயம். அந்த வகையில் பார்க்கின்ற போது. கடந்த காலத்தில் நாங்கள் சுதந்திரத்தை பெற்றிருந்தாலும் கூட. உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை.
கிட்டத்தட்ட 76 ஆண்டுகளாக அந்த சுதந்திரத்தை பேச்சளவில் பேசி கொள்கின்றோம்.செயற்பாட்டளவில் அனுபவிக்கவில்லை அந்த வகையில் சொல்லப்போனால் இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 2009 க்கு பின்னர் நாங்கள் 16 ஆண்டுகள் கடந்து இருக்கின்றோம்.
ஆனால் உண்மையில் நாங்கள் சுதந்திரத்தை பெற்றிருக்கின்றோமா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைத்து இருக்கின்றதா, உண்மையை கண்டறிந்து இருக்கிறோமா, அதேபோன்று இந்த இழக்கப்பட்ட உயிர்களுக்கான நீதி பரிகாரம் கிடைத்து இருக்கின்றதா என்ற பார்க்கும்போது உண்மையில் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது.
எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இந்த சுதந்திர தினத்தினை தாங்கள் கொண்டாட கூடிய மனநிலையில் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை,உண்மை கண்டறியப்படவில்லை, பரிகார நீதி வழங்கப்படவில்லை. என்ற கோஷங்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் எங்களுக்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது துன்பத்தோடும், துயரத்தோடும் அழுகை கண்ணீரோடும் இருக்கின்ற போதும் நாங்கள் இந்த சுதந்திர தினத்தினை. எவ்வாறு கொண்டாட முடியும் என்பதை அரசிடம் நாங்கள் கேட்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது படையில் உள்ளவர்கள் சில பகுதியினர் ஆயுதங்களைக் கொண்டு சில பாதாள லோக கோஷ்டி செயற்பாடுகளை செய்துவிட்டு அவர்கள் முகாம்களில் மறைந்து இருக்கின்றார்கள் என்ற கருத்தை அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அப்படி பார்க்க போனால் கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டதற்கும் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் அல்லது புதைக்கப்பட்டதற்கும் இப்படியான செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கின்றன. எனவே இந்த சுதந்திர தினத்தை ஒரு சுதந்திரமான ஆனந்தமான தினமாக கொண்டாட முடியாத நிலையில் ஏக்கத்தோடும் துயரத்தோடும் நாங்கள் இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு காணப்படவில்லை, உள்நாட்டு ரீதியாகவும் தீர்வு காணப்படவில்லை, சர்வதேச ரீதியாகவும் தீர்வு காணப்படவில்லை ஐக்கிய நாடுகள் தேசிய சபையின் மனித உரிமை பேரவையானது உண்மையை கண்டறிய சொன்னார்கள் நீதியை வழங்க சொன்னார்கள் மீண்டும் அநியாயங்கள் அராஜகங்கள். நடைபெறாமல் பாதுகாப்பதற்கான பொறிமுறையை கையாளுங்கள் எனச் சொன்னார்கள் இவற்றில் எதுவுமே நடக்கவில்லை.
சுயநிர்ணயம்
ஆகவே நாங்கள் இந்த புதிய அரசிடம் சொல்கின்ற விடயம் என்னவென்றால். நீங்கள் குறுகிய காலமாக வந்திருந்தாலும் கூட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி வழங்குவதற்குரிய செயல்பாடுகளில் நீங்கள் படிகளை தாண்டவில்லை என சொல்கின்றோம். அதேபோன்று சர்வதேச விசாரணைக்கு சுயாதீனமான, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நீங்கள் இடமளிப்பதாக தெரியவில்லை.
ஆகவே பச்சை கட்சி ஆண்டாலும் நீல கட்சி ஆண்டாலும் ஏன் சிவப்பு கட்சி ஆண்டாலும் கூட மனித உரிமை மீறல்களுக்கும், இறுதி யுத்தத்தில் நடாத்தப்பட்ட கொடூரமான செயற்பாட்டிற்கும் நாங்கள் நீதியைகேட்கின்றோம், எமது இழப்புக்குரிய காரணங்களை கேட்கின்றோம், அந்த இழப்புகளை ஏற்படுத்தியவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.
இப்படியான செயற்பாடுகள் இல்லாதபடியால். எதிர்வரும் சுதந்திர தினத்தினை நாங்கள் ஒரு கொண்டாட்ட தினம் அல்லாமல் ஒரு திண்டாட்ட தினமாக ஒரு துக்க தினமாக பிரகடனபடுத்தவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில் காணப்படுகின்றோம்.
நாங்கள் அன்றைய தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் அல்லது காணிகளை பறிகொடுத்த மக்களும் மேச்சல் தரையை இழந்து இருக்கின்ற பண்ணையாளர்களும் மற்றும் இதற்காக போராட்டம் நடாத்துகின்ற தமிழர்களும் அன்றைய தினத்தை சுதந்திர தினமாக அனுஷ்டிக்காமல் துக்க தினமாக, ஒரு துயர தினமாக, ஒரு கரி நாளாக அனுஷ்டிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இதனை வேதனையோடு தெரிவித்துக் கொள்கின்றோம். சுதந்திரம் என்பது பேரளவில் நாங்கள் கொண்டாடும் தினமாக அல்லாமல் பேசக்கூடிய தினமாக அல்லாமல், உங்களது உள்ளார்ந்த ரீதியாக உணர்வு ரீதியாக செயற்பாட்டு ரீதியாக கொண்டாட கூடிய ஒரு தினத்தை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அந்த தினம் என்பது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வினை வழங்க வேண்டிய ஒரு தினமாக இருக்க வேண்டும். நியாயமான ஒரு தினமாக இருக்க வேண்டும்.
கையகப்பபடுத்தப்பட்ட பறிக்கப்பட்ட காணிகளை முழுமையாக விடுவிக்க பட்ட தினமாக இருக்க வேண்டும். நம்முடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட தினமாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற மனித குலத்திற்கு எதிரான மனித உரிமைக்கு எதிரான அந்த சட்டங்களை அகற்றுகின்ற ஒரு தினமாக இருக்க வேண்டும். நாங்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக சுவாசிக்க கூடிய ஒரு தினமாக இருக்க வேண்டும்.
அதேபோல இன்னும் ஒரு விடயத்தினை சொல்ல இருக்கின்றேன். வடக்கு கிழக்கில் சுயநிர்ணயம். சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அதுதான் தமிழர்களின் உண்மையான சுதந்திர தினமாக. இருக்க முடியும்.
புதிய ஆட்சியாளர்கள்
நீண்ட காலமாக சுதந்திரத்திற்காக போராடிய எனது மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா கூட தனது 82 ஆவது வயதில் தனது மூச்சை முழுமையாக நிறுத்திவிட்டார். அவரும் தமிழ் தேசிய தாகத்தோடு இருந்தவர். ஒரு சுதந்திரத்தை பெற வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்.தந்தை செல்வா அடுத்ததாக சம்பந்தன், அடுத்ததாக மாவை சேனாதிராஜா அண்ணன், அமிர்தலிங்கம் என்றெல்லாம் பலர்.
கண்களை மூடி இருக்கின்றார்கள். சுதந்திரத்திற்காக ஏங்கியவர்கள் சுதந்திரம் இல்லாமலே கண்களை மூடி இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஒரு சுதந்திரமான தினத்தை புதிய ஆட்சியாளர்கள், சிவப்பு கட்சியினர், இடது சாரியினர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்களும் எங்களை ஏமாற்றுபவராக இருந்ததால். தொடர்ந்தும் இந்த சுதந்திர தினத்தினை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணிகள் பறி கொடுத்தவர்கள் அதேபோன்று தமது மேய்ச்சல் தரையினை இழந்தவர்கள் பல்வேறு ஒடுக்கு வாரத்திற்கு உட்பட்டவர்கள் இது தமிழ் இனம் அன்றைய நாளில் ஒரு துக்க தினமாக மட்டக்களப்பு மக்கள் அனுஷ்டிப்பார்கள் என இந்த இடத்தில் நாங்கள் கூறிக் கொள்கின்றோம்.
ஒரு பொழுதுபோக்காக இதனை செய்யவில்லை எங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு துன்பியல் தினமாக அதனை பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என்பதனை இந்த இடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |