சாரதிகளின் கணக்குகளை தானியங்கி முறையில் முடக்கம்: Uber நிறுவனத்திற்கு 966 மில்லியன் டொலர் அபராதம்
சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் 825 மில்லியன் யூரோ (சுமார் 966 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்க டச்சு தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (AP) தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய பொதுத் தரவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய அபராதத் தொகையாக இது கருதப்படுகின்றது.
2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட சாரதிகளின் கணக்குகளை போதிய மனித தலையீடுகள் இன்றியும், தெளிவான விளக்கமளிப்புகள் இன்றியும் கணினி அமைப்புகள் மூலம் Uber நிறுவனம் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிமீறல்களுக்கான அபாராதம்
நபர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை கணினி வழிமுறைகள் மூலம் மட்டுமே எடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு விதிகள் தடை செய்கின்றன.

மனித பரிசீலனை மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி இவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டமை கடுமையான விதிமீறல் என டச்சு கட்டுப்பாட்டகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்மானத்தையும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் கடுமையாக மறுத்துள்ள Uber நிறுவனம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சாரதிகளின் உரிமைகளைத் தாம் மதிப்பதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சாரதிகளே இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.