தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்!
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இக்குடும்பம் ஆயிரம் நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது தஞ்சக்கோரிக்கை தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை விடுவிக்கப்பட வேண்டும் என்கிறது அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்.
கடந்த 2012இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.
அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.
இக்குடும்பம் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக கவலைத் தெரிவிக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுமார் 700 நிபுணர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து சிறைப்படுத்துவது கோபிகா, மற்றும் தருணிகாவை மேலும் பாதிக்கும் என அவர்கள் கவலைக் கொண்டிருக்கின்றனர்.
“குழந்தை பிறந்த முதல் 2,000 நாட்கள் மிகவும் சிக்கலுக்குரியவை. சிறிய வயதில் ஏற்படும் அனுபவங்கள் நீடித்த விளைவுகளைக் கொண்டிருக்கும்,” என்கிறார் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவரான மருத்துவர் உமர் கோர்ஷித்.