அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
அவுஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
போட்டியில் பெறப்பட்ட ஓட்டங்கள்
அவுஸ்திரேலியாவின் சார்பில் துடுப்பாட்டத்தின் போது ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணியின் தலைவர் பிஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கையின் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இதனையடுத்து, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை இதன் மூலம் பெதும் நிஸ்ஸங்க தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் 122 ஓட்டங்களைப் பெற்றிருந்த சனத் ஜயசூரிய அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
இன்றைய வெற்றியின் மூலம் 05 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது
இலங்கை அணியின் வெற்றி குறித்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.