அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து தப்பித்து செல்ல முயன்ற ஈரானிய அகதி
அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, அவுஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மிகுந்த கவலையுடன் இருந்தோம். மோசமான உடல் நிலையுடன் இருந்தோம். எதாவது நல்லது நடக்கும் என்ற வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்,” எனவும் ஈரானிய அகதி Paayam Sadaat மன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுரங்கப்பாதைத் தோண்டி தப்புவது கடுமையானது என்பதை அறிந்திருந்ததாகவும், நாங்கள் எதிர்கொண்ட மோசமான நிலை மற்றும் வலிக் காரணமாகவே இவ்வாறு செய்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு அவுஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் சுமார் 3 ஆண்டுக்காலம் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள Baxter தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
இவ்வாறான சூழலில், அவுஸ்திரேலிய அரசு மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களை நிர்வகித்த வந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது தற்போது ஈரானிய அகதியான Payam Saadat வழக்குத் தொடுத்துள்ளார்.
அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டத்தில் முக்கியமானதாக அணுகப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு, ஈரானிய அகதிக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் மேலும் பல அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் எனக் கருதப்படுகின்றது.ஈரானிய அகதியின் வழக்கின் விசாரணை அடுத்த 12 வாரங்களுக்கு நடைபெறும் என எண்ணப்படுகின்றது.