டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியா ஹோட்டலில் இருந்த அகதிகளின் நிலை என்ன?
அவுஸ்திரேலியாவால் டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் 32 அகதிகள் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்து காலவரையின்றி ஆஸ்திரேலிய அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அகதிகளை, தஞ்சக்கோரிக்கையாளர்களை காலவரையின்றி தடுத்து வைக்கும் கடுமையான மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொள்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் காலவரையற்ற, நியாயமற்ற குடிவரவுத் தடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவை அவுஸ்திரேலியாவின் புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், அக்குழுவுக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் குடிவரவுத் தடுப்புக்கான மாற்றுவழிகளை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என கண்காணிப்பகம் கூறியுள்ளது.
“அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா கொடூரமாக நடத்துவதை நோவாக் ஜோகோவிச் தடுப்பு காவலில் இருந்த பொழுது உலகம் அறிந்து கொண்டது,” என கண்காணிப்பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குநர் எலைனி பியர்சன் தெரிவித்திருக்கிறார்.
“ஆஸ்திரேலிய தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் சூழலில், அனைத்து அரசியல்
கட்சிகளும் காலவரையின்றி அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து
வைக்கப்படுவதை நிராகரிக்க வேண்டும்,” என பியர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.