புராதன நாணய திருட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது
இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான ஆஸ்திரேலிய டொலர் நாணயத் திருட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரகம பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம - வல்மில்ல ஹந்துன்வன்ன பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவர் ஆஸ்திரேலியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த ஆஸ்திரேலியர் தனது திருமணத்தின் போது எலிசபெத் மகாராணியின் உருவம் அடங்கிய 1000 ஆஸ்திரேலிய டொலர் பெறுமதியைக் கொண்ட தங்க நாணயம் ஒன்றை தனது இலங்கை மனைவிக்குப் பரிசளித்துள்ளார்.
எலிசபெத் மகாராணியின் உருவம் நாணயத்தின் முகப்புப் பக்கத்திலும் பின்புறத்தில் கங்காரு உருவமும் நாணயத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
மிகப் புராதன பெறுமதி
குறித்த நாணயம் அவ்வீட்டின் வரவேற்பறையில் உள்ள அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இத் தங்க நாணயத்தின் எடை 311 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.
மிகப் புராதன பெறுமதியைக் கொண்டுள்ள குறித்த நாணயத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதி அறுபத்தி ஆறு இலட்சம் ரூபாவை விடவும் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆஸ்திரேலியர் சுகயீனமுற்றிருந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி அவரது இலங்கை மனைவி மாத்தறைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி, வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வீட்டுக்குள் பிரவேசித்த போது வீட்டின் அலமாரியில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
சோதனை செய்த போது, உள்ளே இருந்த தங்க நாணயம் திருடு போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பண்டாரகமை பொலிஸார் நாணயத்தைத் திருடிய மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |