பண்டோரா ஆவணங்கள் தொடர்பான ஆதாரங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிடம்! வெளியான தகவல்
அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்களில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் (Ranjan Ramanayake) இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி (Dilip Wedaarachchi) தெரிவித்துள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டோரா ஆவணங்களில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான (ஓடியோ பதிவுகள்) ஆதாரங்களை முன்வைக்க தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை சாட்சிக்காக கட்டாயமாக அழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.