அர்ஜூன் மகேந்திரன் இன்றி வழக்கு விசாரணை செய்ய அனுமதி கோரும் சட்ட மா அதிபர்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன்(Arjun Mahendran) இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், நீதிமன்றில் கோரியுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி வழக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருவரும் தற்பொழுது வெளிநாட்டில் இருக்கின்றனர்.
மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் முதலாம் சந்தேக நபர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் அவரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு காலம் செல்லும் என்ற காரணத்தினால் சந்தேக நபர்கள் இன்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இரண்டாம் சந்தேக நபர் மலேசியாவில் இருப்பதாகவும் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
