சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக 50 பக்க அறிக்கை! இலஞ்சம் - ஊழல் -பக்கச்சார்பு...
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச - ஊழல் -பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பில் 50 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க தயாரித்து கொடுத்ததாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:' சில ஊடகங்களில் அச்சலா தான் சட்டமா அதிபருக்கு எதிராக அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுதான் உண்மை.
அவர்கள் செய்த ஊழல் செயல்கள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நான் தான். அதேபோல் பெண் சட்டத்தரணிகளும் இருந்தார்கள்.
அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்
அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி,அறிக்கையை நான் தயாரித்தேன். அதைத் தயாரித்தது இந்த நாட்டு மக்கள் மீது உள்ள அன்பினாலும், இந்த நாட்டு மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே தவிர, எனக்கு உங்களுடன் எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை.
ஏனெனில் எனக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டமா அதிபர் பதவியைப் பெறவோ அல்லது அரசாங்க சட்டத்தரணியாகவோ எந்தவொரு காலத்திலும் எந்தவொரு வழியிலும் ஆசையோ அல்லது கோரிக்கையோ இருந்ததில்லை.
19 வருடங்களாக அப்படி எதுவும் இருக்கவில்லை. எனக்கு அப்படி சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் செல்ல ஆசை இருந்திருந்தால், நான் சென்றிருக்க வேண்டும்.
எனக்கு அப்படி எதுவுமே இருக்கவில்லை. ஆனால் நாங்கள் கஷ்டப்பட்டு, உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் அன்று நிலவிய வன்முறை கலாசாரத்திற்குள், எங்கள் வீடுகளில் உள்ள சொந்தங்கள் மனதளவில் விழுந்து கிடந்த நேரத்தில் தான் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றினோம்.
பாதிக்கப்பட்டவர்களின் அந்தத் துன்பம், அந்த வேதனை உங்களை விட எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஏனெனில் நாங்கள் அவற்றை எதிர்கொண்டோம்.

எங்களுக்கு சலுகைகள் இருக்கவில்லை.சிலர் சொல்கிறார்கள் நான் பெரிய பிரபல சட்டத்தரணி அல்ல என்று. ஆம், நான் பிரபல சட்டத்தரணி இல்லை.
ஆனால் நான் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், அப்பாவி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தேன். அது எனக்குக் கௌரவம். அந்த அறிக்கையைத் தயாரிக்குமாறு கோரிக்கை விடுத்ததும் இந்த நாட்டின் ஜனாதிபதி தான்.
ஆனால் இறுதியில் அறிக்கையைத் தயாரித்து, தட்டு சூடான நேரத்தில் ரொட்டியைச் சுட்டுக் கொள்வதற்குப் பதிலாக, இப்போது நான் ஒரு ரொட்டியாக மாறியிருக்கிறேன்.
அனைவரும் தட்டைச் சூடாக்கி ரொட்டியைச் சுட்டுக் கொண்டார்கள், இறுதியில் நான் தான் இப்போது ரொட்டியாக மாறியிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.