சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு (Photos)
அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்
அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு நீதி கோரி வவுனியாவில் பெண்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
கொழும்பு - அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி பல்பேவறு சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.
வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்
இதன்போது ஆர்ப்பாட்டக்காரார்கள் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு, கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்த நாங்கள் இலங்கையில் வன்முறைக்கும் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி இங்கு கூடியிருக்கிறோம்.
அண்மையில் இலங்கை அட்டுலுகமவை சார்ந்த 09 வயது சிறுமி மனிதத்தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவமானது அனைத்து மக்களையும், முழு நாட்டையும் சிறுமிகளையும் பெண்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
இவ்வாறான வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவது, பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும்.
இலங்கையில் நடந்த வன்கொடுமைகள்
இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலைச் சம்பவம் கண் ஊடாக காட்டி நிற்கின்றது. இலங்கையில் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்துப் பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது.
இதனால் குற்றங்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. குற்றவாளிகளும் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர். சிறுமிகள் வன்கொடுமைகளுக்கும் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமை குற்றவாளிகளுக்குச் சார்பாகச் சட்டத்தரணிகள் ஆஜராகுவது குற்றவாளிகளை வலுப்படுத்துவதாகவே அமையும்.
அத்துடன் குற்றம் நிறைந்த ஒரு சமூகத்தினை மேலும் வலுவுள்ளதாக்கும். எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கோருகின்றோம். மேலும் 09 வயது சிறுமியின் கொடூரமான கொலையின் உண்மைத் தன்மை வெளிக் கொணரப்பட வேண்டும்.
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன. அத்துடன், நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாகக் குற்றம் நடந்து 03 மாத காலத்திற்குள் தீர்வு வழங்கும் வகையில் நீதி மன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும். சிறுமிகளுக்கான விசேட நீதி மன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வர வேண்டும் எனக் கோருகின்றோம்.
09 வயதான சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன், குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டகாரர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று திரண்ட சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நீதி வேண்டி போராட்டம் முன்னெடுப்பு
நீதிவேண்டும் நீதிவேண்டும், சிறுவர்களை வாழவிடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நீதி கோரிய இந்த கவனயீர்ப்பு அண்மையில் 9 அகவை சிறுமியின் கொலை சம்பவம் முழு நாட்டினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் சட்ட நிலைமை
சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றுவது அரசாங்கத்தினதும் சமூகத்தினரும் கடமையாகும், இலங்கையில் சட்ட ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கும் நடைமுறை இலங்கையில் காணப்படுகின்றது.
சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கம் இணையவேண்டும், 9 அகவை சிறுமியின் கொலையின் உண்மைத்தன்மை வெளிக்கொண்டுவரவேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும், பெண்கள், சிறுவர்களுக்கான விசேட நீதிமன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வரவேண்டும் என கவனயீர்ப்பின் இறுதியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் வாசிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணியின் போது கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் போதைப்பொருள் பாவனையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிககுறைவாக இருப்பதும் காரணம், சிறுவர்கள் மத்தியில் அதிகளவில் போதைப்பொருள் விதைக்கப்பட்டுள்ளன.
ஒருபக்கம் பட்டிணி வாட்டுகின்றது, மறுபக்கம் எதிர்கால சந்ததியினரை வன்முறை வாட்டுகின்றது. இதற்காகச் சரியான பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். சிறுமிக்கு நடந்த கொடுமை பாரதூரமானது. இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் காலத்தில் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை இதனை இன்று நாடாளுமன்றத்திலும் பேசுகின்றார்கள். இந்த ஆயிசாவுக்கு நடந்த படுகொலை இலங்கையில் நடந்த முதல் தடவையான சிறுவர் துஷ்பிரயோகம் அல்ல.
வித்தியா தொடக்கம் இன்றுவரை சிறு பிள்ளைகள் கொலை செய்யப்படும் வரலாறு இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இதற்கு பிரதான காரணமாகப் போதைப்பொருள் பாவனை எனச் சொல்லி வருகின்றார்கள். இந்த போதைப்பொருளினை ஒழிப்பதற்கு இன்னும் சட்டத்தில் இடம் இல்லை என்று தான் நாங்கள் கருதுகின்றோம்.
எல்லாவற்றிற்கும் ஆணைக்குழு அமைக்கப்படுகின்றது. ஆனால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கோ அல்லது போதைப்பொருள் ஒழிப்பதற்கோ ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை.
இதற்கான தனியான ஆணைக்கழுவினை நிறுவி தனியான சட்டத்தினை நாடாளுமன்றத்தில் இயற்றி சிறுவர்கள் வாழ்வதற்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை
நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வன்முறைகளை கண்டித்து திருகோணமலையில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
"அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுமியர் மற்றும் பெண்களை பாதுகாப்பும்" எனும் தொனிப்பொருளில் வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இன்று (31) இடம்பெற்றது.
குறித்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் இது நீதிக்கான போராட்டம்,பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வன்கொடுமை, சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை வழங்குங்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்தை நிறுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
செய்தியாளர் - அப்துல்யாசிம்
மலையகம்
இலங்கையில் சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மற்றும் காணாமல் ஆக்கப்படுவதை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம் வலியுறுத்தியுள்ளார்.
ஹட்டனில் இன்று (31.05.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வு
பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு சிறுவர் சிறுமியரை பாதுகாக்க வேண்டும் எனவும் அனைத்து விடயங்களிலும் நலிவடைந்துள்ள அரசாங்கம், நாட்டின் எதிர்காலமாகிய சிறுவர் சிறுமியர்களை பாதுகாக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
கயவர்களின் கைகளில் அகப்பட்டு சிறுவர், சிறுமிகள் சின்னாபின்னமாவதை கண்டு மௌனிகளாக அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியா, ஆயிஷா உள்ளிட்ட பல மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இதனை ஒரு பாரதூரமான ஒன்றாக கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
செய்தியாளர் - திருமால்
மட்டக்களப்பு
கடந்த 27ம் திகதி அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிசாவின் படுகொலையை கண்டித்தும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் இன்று மட்டக்களப்பு நகரில் பெண்களினால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.
பல்வேறு பதாதைகளைத் தாங்கிய பெருமளவிலான பெண்கள் இதில் கலந்து கொண்டனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



