மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்க கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(07.08.2026) மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கோரிக்கைகள்
குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்களும், கிராம மக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



[PIXRDD2[