சம்பளத்தை உரிய காலப்பகுதியில் வழங்குமாறு கோரி ஊழியர்கள் கவனயீர்ப்பு(Photos)
தமது சம்பளத்தை உரிய காலப்பகுதியில் வழங்குமாறு கோரி குருநகரில் உள்ள "நோத் சீ லிமிடட்" உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் இன்றையதினம், தொழிற்சாலைக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
"எமக்கான சம்பளத்தை உரிய காலப்பகுதியில் வழங்கு, ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டாதே, ஊழியர்களைப் பழிவாங்காதே" எனத் தெரிவித்து பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சுமார் 60 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமக்கு 25ஆம் திகதி கிடைக்க வேண்டிய சம்பளமானது அடுத்த மாதம் 10ஆம் திகதி வந்தாலும் கிடைப்பதில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வாறே நடக்கின்றது.
நாங்கள் இதுபற்றியோ அல்லது எமது ஏனைய பிரச்சினைகள் பற்றியோ பேசும்போது நாங்கள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றோம். நாங்கள் கடன் வாங்கித்தான் எங்களது குடும்பத்தைக் கொண்டு நடாத்திச் செல்கின்றோம்.
உரிய காலப்பகுதியில் சம்பளத்தை வழங்கினால் தான் நாங்கள் மீண்டும் எமக்கான பொருட்களை வேறு சேவைகளையோ பெற முடியும். சம்பளம் பிந்துவதால் எமக்கு கடன் கொடுத்தவர்கள், கொடுத்த கடனை மீள செலுத்துமாறு நச்சரிக்கின்றார்கள்.
எனவே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமக்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் இது எமது உரிமைக்கான போராட்டமே தவிர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான போராட்டம் இல்லை'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று அவரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
இதன்போது அமைச்சர் "நிர்வாகத்தில் உள்ள சீரின்மையாலேயே இவ்வாறு நடக்கிறது.
எனவே இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்களோடு பேசி, ஆகக்கூடியது இரண்டு
வாரத்திற்குள் தீர்வினைப் பெற்றுத் தருவேன் என பதிலளித்துள்ளார்.









இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
