புத்தாண்டு மது விருந்தில் கலந்து கொண்ட நபர் மர்மமான முறையில் மரணம்
புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் மர்மமான முறையில் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த நிலையில், அவரது உடலை தாம் மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் நடந்துள்ள நிலையில் ஹட்டன் தோட்டத்தில் வசித்து வந்த 39 வயதான ஆறுமுகன் குமார் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் கடந்த 31ஆம் திகதி இரவு 8 மணியளவில் தோட்டத்தில் உள்ள வேறு சிலருடன் இணைந்து புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்பதால், மனைவி அவரை தேடிச் சென்ற நிலையில் அவர் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்ததாக மனைவி கூறியுள்ளார்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மது விருந்து நடத்தியதாகவும், உயிரிழந்தவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் விருந்து முடிந்த பின், அனைவரும் அவர்களின் வீடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டதாகவும் விருந்தில் கலந்து கொண்ட அதே தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
விருந்து நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையில் உடல் கிடந்துள்ளதாக தெரியவருகிறது.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல் டிக்கோயா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.