செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனிய மணல் அகழ்வு முயற்சி முறியடிப்பு
முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனமொன்று இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும் உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை நேற்று (13.12.2024) வெளியிட்டிருந்தனர்.
ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில், அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியிருப்புக்களுக்கு பாதிப்பு
மேலும், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது செம்மலை நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், துரைராசா ரவிகரன் மற்றும், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்விற்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த தனியார் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |