சுமந்திரன் கொலை முயற்சி குற்றச்சாட்டு! சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய அனுமதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் தலா 2.5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் இரண்டு சாரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய நிபந்தனையுடன் பிணை
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த வழக்கின் சட்டத்தரணிகளாக கே.எஸ்.ரட்னவேல், சுரங்க பண்டார, ரனிதா ஞானராஜா மற்றும் சுவாதிக்கா ரவிச்சந்திரன் ஆகியோர் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



