பயணிகள் பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சி! குற்றவாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (29.3.23) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு கொழும்பு ஹோர்டன் சுற்றுவட்டத்தில் பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நாகலிங்கம் மதனசேகரன் வயது (27) என்ற பிரதிவாதிக்கு கடூழிய தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை உத்தரவு
இதே குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்தை புறக்கணித்து வரும் மற்றுமொரு பிரதிவாதியான தர்மலிங்கம் முகுந்தனை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவும் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், முகுந்தன் நீதிமன்றத்தில் இன்னும் முன்னிலையாகவில்லை. இதன் காரணமாக குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முகுந்தனுக்கு எதிரான பிடியாணை உத்தரவு குறித்து கட்டுநாயக்க, மத்தள மற்றும் பலாலி விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறும், இன்டர்போல் ஊடாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டதாகவும் நீதிபதி மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
50 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து
இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனது சேவைபெறுநருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்த போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
2008 செப்டம்பர் முதலாம் திகதி அன்று குறித்த இருவரும் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றில் வெடிமருந்து சாதனத்தை வைத்துள்ளனர்.
இருப்பினும், சந்தேகத்தின் பேரில், பொதியைக் கண்ட பேருந்தின் நடத்துனர், பேருந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றி, அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். பின்னர் பேருந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டு, சோதனையில் வெடிகுண்டு அடங்கிய பொதி மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.