கடும் அதிருப்தி அடைந்த இலங்கை அகதி குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி!
நீதிமன்றம் உத்தரவுப் பெற்றும் அதிகாரிகள் அலைக்கழித்ததால் அதிருப்தி அடைந்த இலங்கை அகதி குடும்பத்தினருடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கீழ்ப்புத்துபட்டு அகதிகள் முகாமை சோ்ந்தவா் மனோரஞ்சிதம் (50). இவரது பெயரிலும், இவரது சகோதரர் பெயரிலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள மணக்காட்டூர் பகுதியில் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அருகில் உள்ள வீரச்சாமி மற்றும் தங்கம் (எ) பொன்னையா ஆகியோா் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்து கொடுக்க நீதிமன்றம் மூலம் மனோரஞ்சிதம் உத்தரவு பெற்றுள்ளார்.
அந்த உத்தரவை நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தும் நில அளவீடு செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பல முறை முறையிட்டும் பயனில்லாததால் அதிருப்தி அடைந்த மனோரஞ்சிதம், தனது மகள் மணிமாலா, மருமகன் ஆதி மற்றும் பேரன் என குடும்பத்தோடு வட்டாட்சியர் அலுவலகத்திலேயே டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார், டீசல் கேனை பறித்து, மனோரஞ்சிதம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri