மஹரகம மருத்துவமனைக்கு பழமையான கதிர்வீச்சு இயந்திரத்தை கொள்முதல் செய்ய முயற்சி: விசாரணை கோரிக்கை
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்திற்கு பதிலாக, சுமார் 17 ஆண்டுகள் பழமையான LINAC கருவியை கொள்முதல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இந்த கொள்முதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது அதிநவீன உபகரணங்கள் சந்தையில் இருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு மருத்துவ உபகரண விநியோக நிறுவனத்தின் தனிப்பட்ட நன்மைகளுக்காக இந்த காலாவதியான மாதிரி இயந்திரத்தை வாங்க முயற்சிப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்
இந்தக் கொள்முதல் செயல்முறை குறித்தும், அண்மையில் மருத்துவமனையில் நிறுவப்பட்ட 'CT simulation' இயந்திர கொள்முதல் மற்றும் நிறுவலின் போது குறித்த நிறுவனத்தின் தலையீடு குறித்தும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் சில தொழில்நுட்ப குழுக்கள் நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், இதனால் புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மஹரகம மருத்துவமனைக்கு, பொதுமக்களின் பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தி தற்போதைய மருத்துவ தேவைகளுக்கு ஏற்ற நவீன உபகரணங்களையே வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ, வலியுறுத்தியுள்ளார்.