சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் அரசின் முயற்சியை தடுக்கக் கூடாது:ரணில்
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு தடையேற்படுத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு அனைத்து தரப்பினரும் இந்த சந்தர்ப்பத்தல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்தளம் பெத்தனி பங்களாவில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் பெத்தனி பங்களா என்பது முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. பண்டாரநாயக்க தனது முதல் இரகசிய கூட்டத்தை நடத்திய இடம் எனக் கூறப்படுகிறது.
டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமல் நெருக்கடியை தீர்க்க வேறு வழி இருந்தால், அதனை முன்வைக்குமாறு ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றது. கஷ்டமான நேரங்களில் நாங்கள் நாணய நிதியத்திடம் சென்றோம் என்ற போதிலும் நிதியம், நாட்டிற்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.
ஒரு நாட்டின் நிதி ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விடயங்களையே சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டில் நிலவும் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.