தமிழின அழிப்பை மூடிமறைக்கும் முயற்சியில் கொழும்பின் சிவில் சமூக அமைப்புகள்!
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூக அமைப்புகள் சில மேற்கொண்டு வருகின்றன என உலக தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2015 இல் எவ்வாறானதொரு சூழல் காணப்பட்டதோ அதேபோன்ற சூழலே தற்போதும் காணப்படுகின்றது. மேற்குலகநாடுகள் இலங்கையில் மீண்டுமொரு ஆட்சிமாற்ற நாடகத்தை அரங்ககேற்ற ஆரம்பித்துள்ளன.
அதாவது தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் வழமைபோல பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
அதனையொட்டி மேற்குலக நாடுகளின் அமைப்புகளும்,கொழும்பை தளமாக கொண்டியங்கும் அமைப்புகளுடன் இணைந்து குறிப்பிட்ட ஒரு தமிழ் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் மற்றும் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் இயங்கும் சில புலம்பெயர் அமைப்புகளும் அதற்கான செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் இலங்கை தொடர்பில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46-1 தீர்மானத்தின் அடிப்படையில் இம்மாதம் தொடங்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை சபையின் 49வது கூட்டத்தொடரில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். மனித உரிமை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியாகவுள்ளது.
இந்த அறிக்கைக்கான தரவுகளை சேகரிப்பதற்கு டிசம்பர் 31ம் திகதி வரை காலஅவகாசம் இருந்தது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட தரப்புகள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடமிருந்து தமக்கு எவ்வித அறிக்கைகளோ முறைப்பாடுகளோ கிடைக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்முறை கூட்டத்தொடரிலும் துறைசார்ந்த 21 அறிக்கையாளர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். இவர்களிற்கான தரவுகளை மேற்குறிப்பிட்ட தமிழர் தரப்பினர் அனுப்பிவைக்கவில்லை,இவர்களின் அறிக்கைகள் வழமையாக ஆணையாளரின் அறிக்கையில் தாக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
வழமைபோன்று தமிழர் தரப்பினராகிய நாம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்காது ஐநாவிடமிருந்து வலுவான அறிக்கையை எதிர்பார்க்க முடியாது.
கொழும்பை தளமாக கொண்டியங்கும் சிங்கள முஸ்லீம் அமைப்புகளுடன் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் அமைப்புகளும் சிறுசிறுவிடயங்களை கூட பூதாகாரமாக்கி ஐ.நாவிற்கு அனுப்பிவைக்கின்றனர்.
குறிப்பாக பல அறிக்கைகளில் மதம் சார்ந்த சமூகங்கள் பாதிக்க்பபட்டன என தெரிவிக்கப்படும் அளவிற்கு இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித பேரவலமான தமிழின அழிப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை.
கடந்த வருடம் வெளியான மனித உரிமை ஆணையாளரின் 46வதுஅமர்வின் அறிக்கையில் மாத்திரம் முதற்தடவையாக தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு 2020இல் ஆணையாளரின் குழுவினர் மற்றும் விசேட பிரதிநிதிகளிடம் தமிழர் தாயகத்தில் இடம்;பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாங்கள் வழங்கிய அறிக்கைகளே காரணம்.
இந்த கூட்டத்தொடரினை முன்னிட்டு கடந்த வருடம் முதல் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.
அந்தவகையில் ஆணையாளரின் அறிக்கைக்கு வலுசேர்க்கும் தாயகத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலான பல முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம். அத்துடன் கூட்டத்தொடருக்கான பல எழுத்து மூல அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
இதில் சிறப்பு அம்சமாக ஐநாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்துஒரு எழுத்துமூல அறிக்கையினை சமர்ப்பித்துள்ளோம். அமைப்புகள் ஊடாக பல வாய்மூல அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளோம்.
கடந்த வருடம் ரோகிங்யா இன மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தமிழர் தரப்பினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுவது ஒரு முதல்படியே.
ரோகிங்யா மக்களின் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கான 37 சட்டத்தரணிகள் ஊடாக முயற்சி எடுக்கப்பட்டது.அதில் ஒருவர் தற்போது தமிழர்களின் பிரச்சினையை எடுத்துச்சொல்லும் சட்டத்தரணியாவார்.
ஆகவே உரிமைக்காக போராடும் இனங்கள் செயற்படவேண்டிய அனைத்து பன்னாட்டு இராஜதந்திர தளங்களில் சரியான பொறிமுறைகளை உள்வாங்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ Cineulagam
