வலுக்கும் தமிழ் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் விவகாரம்!
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று 26.12.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
ஊழல்களை வெளிப்படுத்த முயற்சி
கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வனைப் பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து இவ்வாறு கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயங்களுடன் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியமை மற்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் தகவல்களைப் பெற்று பல ஊழல்களை வெளிப்படுத்த முயன்றமையின் காரணமாக தாம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளப்பட்டுள்ளார் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல்
தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வானைச் செலுத்தி வந்த சாரதியை அடையாளம் காட்ட முடியும் என்று தமிழ்ச்செல்வன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணையை மேற்கொண்டு அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணியை முன்னெடுக்கும் சூழ்நிலையை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஏற்படுத்தப் பாதுகாப்புத் தரப்பினர் பணியாற்ற வேண்டும்." என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |