தாக்குதலை நிறுத்த முடியாது! ரஷ்யா அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுகள் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக, அதாவது போருக்கு எதிராக வாக்களித்துள்ளார். ஆனால் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என ரஷ்யா கூறி உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை ரஷியா கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
இந்த வழக்கில் இரு தரப்பில் இருந்தும் ஒப்புதல் பெற முடியாது. எனவே, தீர்ப்பு செல்லாது என்றார் பெஸ்கோவ். ரஷ்யா ஏற்க மறுத்ததால் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு பயனற்றதாகவே உள்ளது. அடுத்து இந்த விடயத்தில் ஐ.நா. சபை தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கும்.