இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு: நான்கில் இரு பிரிவினருக்கு மாத்திரமே பணம்..! வெளிவந்துள்ள தகவல்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்பட்ட அஸ்வெசுமவின் நான்கு பிரிவு பயனாளிகளில், இரு பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினம் (11.09.2026) நாடாளுமன்றில் வைத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அஸ்வெசும வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2023ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.
இந்த வேலைத்திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்தனர். எனினும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.
கடந்த 2025ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522ஆக குறைந்துள்ளது. இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
கொடுப்பனவு
அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டன. இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்தன.

இதற்கமைய, தற்போது அதிவறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26