தீவிர உடல்நலக்குறைவு! நாசாவிலிருந்து பூமியில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் (NASA) மைக் ஃபிங்கே (கெப்டன்), ஜீனா கார்ட்மேன், ஜப்பானின் கிமியா யுய் மற்றும் ரஷ்யாவின் ஒலெக் பிளாட்டோனோவ் ஆகிய நால்வரே பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
தீவிர உடல்நலக்குறைவு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஒருவருக்கு ஏற்பட்ட "தீவிர" உடல்நலக் குறைவு காரணமாக திட்டமிட்ட காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவசரமாக வெளியேற்றப்பட்டு, கலிபோர்னியா கடற்கரை அருகே கடலில் பாதுகாப்பாக இறங்கினர்.
நான்கு வீரர்களில் யாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது அல்லது என்ன நோய் என்பது குறித்த விபரங்களை நாசா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இருப்பினும், பாதிக்கப்பட்ட வீரர் தற்போது நலமுடனும், உற்சாகத்துடனும் இருப்பதாக நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கடந்த 2025 ஆம் ஆகஸ்ட் முதலாம் திகதி விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். பெப்ரவரி மத்தியில் திரும்ப வேண்டிய இவர்கள், மருத்துவக் காரணங்களால் ஜனவரியிலேயே திரும்பியுள்ளனர்.
மூன்று வீரர்களுடன் இயங்கும் சர்வதேச விண்வெளி நிலையம்
இந்த நால்வரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையம் தற்போது வெறும் மூன்று வீரர்களுடன் இயங்கி வருகிறது. அடுத்த குழு பெப்ரவரி மாதம் செல்லும் வரை இவர்கள் நிலையத்தைப் பராமரிப்பார்கள்.

1998 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, மருத்துவக் காரணங்களுக்காக ஒரு குழு முழுமையாக வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக சோவியத் யூனியன் காலத்தில் 1985 மற்றும் 1987 ஆம் ஆண்டு மட்டுமே உடல்நலக் குறைவால் விண்வெளிப் பயணங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
விண்வெளி நிலையத்தில் சில மருத்துவ உபகரணங்கள் இருந்தாலும், அங்கு தங்கிச் சிகிச்சை அளிக்க தகுதியான மருத்துவர் கிடையாது.
விண்வெளி வீரர்களுக்குத் தரப்படும் அடிப்படை முதலுதவி பயிற்சியைத் தாண்டி ஒரு தீவிரப் பிரச்சனை ஏற்படும்போது, பூமிக்குத் திரும்புவதே ஒரே தீர்வாக உள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri