மட்டக்களப்பில் அதிபர் படுகொலையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் தொடர்பு? அதிர்ச்சித் தகவல்கள் பல (Video)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பாடசாலை அதிபர் செபநாயகம் மங்களச்சந்திரா( 53 ) என அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை சகோதரியிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மங்களச்சந்திராவை அவரது மகனும் மகனின் நண்பன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் சேர்ந்து மருத்துவமுறையில் படுகொலை செய்து உடலை திராய்மடுவில் வீசியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது சகோதரியான ஒய்வுபெற்ற ஆசிரியர் செபநாயகம் சந்திரகலா தெரிவிக்கையில்,
எனது சகோதரன் ஆரையம்பதி நவரட்ணம் வித்தியாலய அதிபராக கடமையாற்றி வந்தார். இவருக்கு 18 வயதில் ஒரு மகளும் 24 வயதில் ஒருமகனும் உள்ளனர்.
மகன் உயர்தரம் வரை கற்றுள்ளார். அவரின் நண்பன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டில் மருத்துவபீடத்தில் கற்று வருகின்றார். இருவரும் சேர்ந்து பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் மகனையும் அவனது நண்பனையும் எனது சகோதரன் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் மகனை கணவர் எச்சரித்ததையடுத்து, கணவன் மனைவிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் கணவனுக்கு எதிராக மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து கொலை செய்யப்பட்ட சகோதரனை பொலிஸ் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இருவரையும் அழைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடராது சகோதரனை அங்கு செல்லக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சகோதரன் எனது வீட்டிலும் பின்னர் எனது சகோதரர் வீட்டிலுமாக சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்துள்ள நிலையில் அவர் பிள்ளைகளை விட்டுவிட்டு இருக்க முடியாது மனவேதனையடைந்தார்.
இதனை தொடர்ந்து சகோதரனை எமது உறவினர்கள் அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று குறித்த பொலிஸ் அதிகாரியை சந்தித்து வீட்டில் சென்று இருக்க வேண்டும், அதற்கான அனுமதியைதருமாறு கோரினார்.
அப்போது அந்த பொலிஸ் அதிகாரி எனக்கு கப்பமாக 2 கியூப் மணல் தருமாறும் எனது மனைவி கடமையாற்றும் இன்சூரன்ஸ் கம்பனியில்; நீ இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும் அப்போது தான் உன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தனது பிள்ளைகளை விட்டு பிரிந்திருக்க முடியாத அவர் மணலை வாங்கி கொண்டு பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்ததையடுத்து அந்த அதிகாரியின் மனைவி வேலைபார்க்கும் இன்சூரன்ஸ் கம்பனிக்கு சென்று அவர் மூலமமாக 50 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி தனக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்.
அதன்பின்னர் எனது சகோதரனை பொலிஸ் அதிகாரி வீட்டின் மேல்மாடியிலுள்ள மேல் தளத்தில் எந்தவிதமான வசதிகளும் இல்லாத பகுதியில் இருக்க அனுமதித்ததுடன் மனைவி பிள்ளைகளுடன் பேசகூடாது என கட்டளையிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மகனின் நண்பனை வீட்டிற்கு வருவதை தடைசெய்ய முயற்சித்தபோது மகனுக்கு அவனது தாயார் உடந்தையாக செயற்பட்டு வருவதால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதுடன், மனைவியார் குறித்த பொலிஸ் அதிகாரி ஊடாக கணவனை மிரட்டி வந்துள்ளார்.
இவ்வாறு தினமும் பிரச்சனை ஏற்பட்டுவந்த நிலையில், மகனின் நண்பனின் தாயார் ஓர் ஆசிரியர் என்பதால், அவரை அழைத்து நான் இந்த பிரச்சனை தொடர்பாக தெரிவித்ததுடன் 3 தடவைக்கு மேலாக அவருக்கு தொலைபேசி ஊடாக அறிவுறுத்தல் செய்தேன்.
அதற்கு அவர்கள் ஏன் ஏன்று கூட கவனம் செலுத்தவில்லை. கடந்த வியாழக்கிழமை (03) திகதி சகோதரன் மங்களச் சந்திரா எனது வீட்டிற்கு வந்து தாய் தந்தையரை பார்த்துவிட்டு மதிய நேர உணவை உண்டுவிட்டு சென்றவர்.
அடுத்த தினமான வெள்ளிக்கிழமை திராய்மடுவில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தோம். அப்போது அவரை கொலை செய்துவிட்டு கொண்டுவந்து போட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஏன் என்றால் அவரின் உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதுடன் சடலம் இருந்த இடத்துக்கு அருகில் மருந்து ஏற்றும் ஊசி சிறிஞ் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை பிரேத பரிசோதனையில் அவர் மதுபோதை பாவித்ததாகவோ, அல்லது மாரடைப்பாலோ உயிரிழக்கவில்லை எனவும் இந்த உயிரிழப்புக்கான காரணம் அறிய முடியாததால் உடலின் முக்கிய உறுப்புக்களை வெட்டி எடுத்து அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சகோதரனின் உடலை நான் நீதிமன்றில் கேட்டபோது நீதிமன்றம் என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இருந்தபோதும் பொலிசாரிடம் நான் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் கொலை செய்துள்ளதாக முறைப்பாடு செய்தேன். பொலிசார் இது தொடர்பான விசாரணை செய்யவில்லை.
எனவே எனது சகோதரனை அவரது மகன், அவனது நண்பன் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோர் திட்டமிட்டு மருத்துவ முறையில் படுகொலை செய்துள்ளனர். எனவே எனது சகோதரனுக்கு நீதிவேண்டும் என அவர் கண்ணீர்மல்க தெரிவித்தார் .