துறவறம் என்பது அச்சுறுத்துவதற்கான உரிமை அல்ல! வக்கமுல்லே உதித்த தேரர் சுட்டிக்காட்டு
துறவறம் என்பது எந்த நேரத்திலும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்கோ, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையோ அல்ல என்று வக்கமுல்லே உதித்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரருக்கு மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்று ஒருசில பிக்குமார் வலியுறுத்தி வருவது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டதையும், அவர் சிறை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவத்தையும் சில அரசியல் குழுக்கள் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
சட்ட நடைமுறை
ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின்படியே தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஒரு நீதிமன்றத் தீர்ப்புடன் உடன்படாதவர்கள் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் உதித்த தேரர் சுட்டிக்காட்டுகிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் சிறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய தேரர், ஒரு துறவி சிறையில் அடைக்கப்படும்போது, அதற்கேற்ற உடைகள் தொடர்பான சட்ட நடைமுறையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கலந்துரையாடல்கள்
மேலும் ஞானசார தேரரைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை நேரடியாக விவாதிக்காமல், அங்கியைக் களைந்த சம்பவத்தை ஒரு அரசியல் முழக்கமாக மாற்றுவதன் மூலம் சில கட்சிகளின் அரசியல் நோக்கங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் விமர்சித்தார்.

தாய்லாந்திற்குச் சென்றிருந்த பிக்குகள் குழு சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்த வக்கமுல்லே உதித தேரர், தற்போதைய பிரச்சினைக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.