கிண்ணியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: அருண் ஹேமச்சந்திரா
கட்சி, இன வேறுபாடுகளைக் கடந்து கிண்ணியாவின் அபிவிருத்திக்காக நாம் அணைவரும் ஒன்றிணைவோம் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்துக்கான இந்த வருடத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(28.01.2026) கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். கனி வழிநடத்தலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதேசத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அருண் ஹேமச்சந்திரா மேலும் கூறியதாவது,
கடந்த காலங்களில் நாம் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தற்போது ஒரு முன்னேற்றகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கிண்ணியா பிரதேசத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.

அரசியல், கட்சி, இன அல்லது பிரதேச வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒருமித்துச் சிந்தித்தால் மட்டுமே இலக்குகளை இலகுவாக அடைய முடியும்.
எதிர்காலத்தில் நாம் அனைவரும் இவ்வாறு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வடிகான் அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, அண்மைய வெள்ள அனர்த்தங்களின் போது கிண்ணியா பிரதேசம் பெருமளவில் பாதுகாக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுவொரு சிறந்த முன்னாயத்தத் திட்டம் எனப் பாராட்டிய அவர், இந்த வருடமும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான திட்டங்களை முன்மொழியுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீர்மானங்கள்
ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய துறைகள் சார்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1. பிரதேசத்தின் பிரதான வீதி அபிவிருத்தி மற்றும் மின்சார விநியோகச் சீரமைப்பு
2. விவசாயம், மீன்பிடி மற்றும் சுகாதாரம் சார்ந்த உட்கட்டமைப்பு மேம்பாடு
3. மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்தல்
4. கடந்த வெள்ள அனர்த்தங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டன.
இந்த கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட செயலாளர் ஜி.எச்.எம். ஹேமந்த குமார, கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி மற்றும் பிரதேச சபை தவிசாளர் எம். ஆர். அஸ்மி , தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச இணைப்பாளர் மற்றும் பல்வேறு அரச திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

