உல்லாசப் பிரயாணிகளால் களைகட்டும் அறுகம் குடா பிரதேசம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம் குடா பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக சூழப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம் குடா கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
கடந்த கால கொரோனா அனர்த்தம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொருளாதார சீர்கேடு (எரிபொருள் பற்றாக்குறை எரிவாயு பற்றாக்குறை) அரகல கிளர்ச்சி உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பிரதேச சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டு பயணிகள்
எனினும் தற்போது நாடு மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.










