டொலர் பெறுமதி அதிகரிப்பைத் தடுக்க செயற்கை தீர்வுகள்!
நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த டொலரின் பெறுமதியை செயற்கையாக கட்டுப்படுத்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரூபாயின் மதிப்பு சரிந்து வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர், வர்த்தக வங்கிகளின் தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்ற நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் இரண்டு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அத்தோடு, டொலரின் மதிப்பை 329/335 ரூபாவுக்கு இடைப்பட்ட வரம்பில் பேணிக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செயற்கை தீர்வுகள்
இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளை மீறி, வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்களுக்கு ஒரு டொலருக்கு 330 ரூபா என்ற அதிகாரப்பூர்வமற்ற கட்டுப்பாட்டு விகிதத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது.

அத்துடன், இறக்குமதியாளர்கள் 90 நாட்களுக்குள் நாட்டிற்குள் பணத்தைக் கொண்டு வர வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இது போன்ற பல தற்காலிகத் தீர்வுகளைச் செயல்படுத்தியது.
எரிபொருள் விலைகள்
ஆனால் கடைசியில் நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைவதை தடுக்க முடியாமல் போனது. தற்போதுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது தவிர்க்க முடியாதது.

அத்துடன் , எரிபொருள் விலைகள் மற்றும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.