பாரதூரமாக மாறும் பொருளாதார நிலைமை:ஆர்டிகல் நான்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் நாணய நிதியம்
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆர்டிகல் நான்கு அறிக்கையை நிதியத்தின் பணிப்பாளரிடம் கையளிக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Dr.Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்காது, அந்த அறிக்கையை இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, கட்சி பேதங்கள் இன்றி, நாட்டை கட்டியெழுப்ப, அந்த அறிக்கைக்கு அமைய ஸ்திரமான வேலைத்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு தற்போது விழுந்துள்ள நிலைமைக்கு அமைய தேசிய தீர்வு ஒன்றின் மூலம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முயற்சிப்பது மூடத்தனமாக செயல்.
எனினும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரசியல் தேவையின் அடிப்படையில் செயற்பட்டு, தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்தன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடம் பெறக் கூடியதாக இருந்த தீர்வை கூட பெற முடியாத நிலைமை நாளுக்கு நாள் உருவாகி வருகிறது.
அதேவேளை தற்போது எரிபொருள் பிரச்சினை மின்சார பிரச்சினையாக மாறியுள்ளது. இது இலங்கை பிரதான வங்கிகளின் ஸ்திரத்தன்மை பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடனை வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போது புரிகிறதா பிரச்சினையின் பாரதூரமான நிலைமை?. இலங்கையில் வங்கிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால், சாதாரண மக்களே கஷ்டத்திற்கு உள்ளவார்கள். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுவது போல் அரிசி கூப்பன் மற்றும் எண்ணெய் கூப்பன் முறையை தற்போதைய சமூகத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியாது.
ராஜபக்சவினர் முற்றாக பிரச்சினையை மேலும் மேலும் உக்கிரமடைய செய்து விட்டனர். தற்போது செல்வதற்கு வழியில்லை. சுயதீன பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கூறவதை ராஜபக்சவினர் கேட்க தயாராக இல்லை.
இப்படி நாடு ஒன்றை நிர்வாகம் செய்ய முடியாது. எதிர்வரும் 25 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
கட்சி பேதங்கள் இன்றி நாட்டு மக்களை காப்பற்றும் வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு கோருகிறோம் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.