ஓர் அவல நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
உலகினர் அனைவரின் முன்பாகவும் பெரும்போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வெறும் 41 கிலோமீற்றர்கள் நீளமும் 06 தொடக்கம் 12 கிலோமீற்றர்கள் வரை நீளமும் கொண்ட பாலஸ்தீனத்தின் தலைநகர் காஸாவுக்குள் ஒதுங்கியிருக்கும் சுமார் 23 லட்சம் மக்களை இஸ்ரேல் கொன்றொழித்துக்கொண்டிருக்கின்றது.
இந்தக் கொலைகளுக்குப் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா எனப் வல்லரசு நாடுகள் பலவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இரவு – பகலாக ஓய்வின்றி இடம்பெறும் இந்தத் தாக்குதல்களால் இதுவரையில் 5000 இற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
காஸா, மேற்குகரை ஆகிய பகுதிகளிலிருந்து 700 சிறுவர்கள் உட்பட 2080 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் 19 பேர் இஸ்ரேலிய விமானத்தாக்குதல்களினால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனத்திற்கான பணியாளர்கள் 35 பேர் இதுவரையான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வலயங்களுக்குள் நகர்த்தப்பட்ட பொதுமக்களை
போர் இடம்பெறும் வலயங்களில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் போரில் காயப்பட்டவர்களுக்கும், நோயாளர்களுக்கும் இறுதி உயிர் பாதுகாப்பினை மருத்துவமனைகளே வழங்குகின்றன.
எனவே மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது போர்க்குற்றமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தில் அந்த மருத்துவமனையையே முற்றாக அழித்தது.
மருத்துவமனை மாத்திரமல்லாது, பாலஸ்தீனத்தின் காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் வாழும் பொதுமக்களுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் கலந்திருந்து தம் மீது தாக்குதல் நடத்துவதாகவும், எனவே தாம் அறிவிக்கும் பாதுகாப்பு வலயங்களுக்குள் பொதுமக்களை விரைவாக நகருமாறும் அறிவித்தல் விடுத்திருந்தது.
அவ்வறிவித்தல் விடுக்கப்பட்டு 24 மணிநேரங்களுக்குள் பொதுமக்கள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளும், கொத்தணிக்குண்டுகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் அனைத்து முன்னணி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தொடர்ச்சியாக இதனை ஆதாரப்படுத்தி வருகின்றன.
இவ்வளவு மனிதவுரிமை மீறல்களும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும், போர்க்குற்றங்களும் இடம்பெற்றுவரும் நிலையில், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் இது குறித்து நீண்ட மௌனத்தைக் கடைபிடிக்கின்றன.
அவர்களது பார்வையின் முன்பே இந்தக் கொலைகள் இடம்பெறுகின்ற போதிலும் அவ்வமைப்புகள் ஒரு கண்டன அறிக்கையைத்தானும் வெளியிடத் தயங்குகின்றன.
அல்ஜசீரா ஊடகத்தைத் தவிர, உலகின் முதன்மை ஊடகங்கள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. காஸாவில் கொல்லப்படும் ஒவ்வொரு உயிரையும் சர்வதேச பயங்கரவாதிகள் போல சித்திரிக்கின்றன.
இனப்படுகொலை
சமூக வலைதளங்களும் இல்லாவிட்டால், பாலஸ்தீனத்தின் அவலம் உலகின் கண்முன் வராமலே போயிருக்கும். இலங்கையில் 1947 ஆம் ஆண்டு அப்போதைய விவசாய அமைச்சர் டட்லி சேனநாயக்கா, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தினார்.
அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகப் பிரிந்து செல்ல வாய்ப்பிருக்கின்றது என்பதை ஊகித்த சேனநாயக்கா, இஸ்ரேலிடமிருந்து குடியேற்ற அனுபவங்களைக் கற்றுக்கொண்டு அதனை இங்கே நடைமுறைப்படுத்தினார்.
பாலஸ்தீனம் என்கிற பழமைமிக்க தேசத்தில் குடியேறி, தம் திட்டமிட்ட குடியேற்றங்களால் பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை அந்நிலத்துப் பூர்வீகக் குடிகளிடமிருந்து அபகரித்து, யூதர்களின் நாடாக இஸ்ரேலை எப்படி உருவாக்கினார்களோ, அதே மாதிரியானதொரு குடியேற்றப்பாணியை அவர் முன்னெடுத்தார்.
அதன் வெற்றிப்பயணம் இன்றைக்கும் தொடர்கிறது. இந்த வேலைத்திட்டத்திற்குப் பிரதியுபகரமாக இலங்கையிடமிருந்து இஸ்ரேலும் சில விடயங்களைக் கற்றுக்கொண்டது.
அந்த அபகரிப்புப் பரிமாறலின் விளைவைத்தான் பாலஸ்தீனியர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த ஈழப்போரானது பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியிருந்தது.
இன்று போல் அன்று பரிச்சயப்பட்டிருக்காத சமூக ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இந்த இனப்படுகொலையை பெரியளவில் வெளியுலகிற்கு எடுத்துச்செல்லவில்லை.
அவ்வப்போது தமிழ் இணையதளங்களில் வெளியான படுகொலைச் செய்திகள், உள்நாட்டுத் தமிழ் பத்திரிகைகளின் செய்திகள் என்பவற்றைத் தாண்டி போர் முடியும் வரை கவனத்தைப் ஈர்க்கும் செய்திகள் எவையும் வெளிவரவில்லை.
மனிதாபிமான போர்
பாலஸ்தீனர்களைப் போலவே , ஈழத்தமிழர்கள் மீதான சர்வதேச அரசியலும் பின்னப்பட்டிருந்தமையால், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என வல்லரசுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே நின்றன.
இலங்கை அரசுக்கு நிதி, ஆயுதங்கள் ஆயுதத் தொழில்நுட்பம், பயிற்சி என அனைத்தையும் வழங்கின. சில நாடுகள் தம் படைகளைக்கூட நேரடியாகக் களமிறக்கின் என்கிற தகவல்கள்கூட வெளியாகியிருந்தன.
இன்றையா காஸாவினைப் போலே மிகக் குறுகியதொரு கடற்கரை நிலப்பரப்பான மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரைக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டனர்.
அவ்வாறு மக்கள் இலகுவில் வெளியேற முடியாத நிலப்பரப்புக்குள் அடைத்துவிட்டு, இலங்கை இராணுவம், அந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமானப் போரை மேற்கொண்டது.
நாள்தோறும் புதிதுபுதிதாக பாதுகாப்பு வலயங்களை அறிவித்த அரசானது, மக்கள் அந்தப் பகுதிக்கு நகர்ந்தவுடன் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தியது.
தம் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி, அரசு அறிவித்த பாதுகாப்பு வலயங்களுக்குள் குவிந்த மக்கள் கொத்துக்கொத்தாக செத்துமடிந்தனர்.
அதற்கு அடுத்தபடியாக வகைதொகையின்றி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் இயங்கிய அரச மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போரில் படுகாயமடைந்து, உயிர் பிச்சை கேட்டு அரச மருத்துவமனைகளை நாடியிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம்
போர்களின்போது பயன்படுத்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களையும் இலங்கை அரச படைகள் பயன்படுத்தின. கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இறுதிப் போர் இடம்பெற்ற காலமான 2004 தொடக்கம் 2010 வரைக்கும் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் வலயத்துக்கு உள்ளே நின்று ஊடகப் பணி செய்தவர்களும், போர் வலயத்துக்கு வெளியே நின்று இறுதிப்போர் மானுட அவலங்களை வெளிப்படுத்தியவர்களும் கொல்லப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர்.
இன்றைய காஸா இனப்படுகொலையைப் போலவே கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணிப்பிட யாராலும் முடியவில்லை. கொல்லப்படுபவர்களை அப்படியே கைவிட்டு, தம் உயிரைப் பாதுகாக்க வேறிடம் ஓட வேண்டிய நிலையிலேயே மக்கள் வாழ்ந்தனர். எனவே ஊடகங்கள் படுகொலையானவர்களின் எண்ணிக்கையைத் தோராயமாகவே வெளியிட்டன.
போர் இடம்பெற்ற வேளையில், சரணடைபவர்களுக்கு பொதுமன்னிப்பு என அரச படைகள் ஓயாமல் அறிவித்துக்கொண்டிருந்தன. அதனை நம்பி வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலர், சுட்டுக்கொலை செய்யப்பட்ட படங்களை சனல் 4 ஊடகத்தின் ”இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் வெளிப்படுத்தியிருந்தது.
பிரபாகரனின் கடைசி மகனான 12 வயது நிரம்பிய சிறுவன் பாலச்சந்திரன், உயிரோடு பிடிக்கப்பட்ட பின்னர், பிஸ்கட் வழங்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.
போர் முடிந்தவுடன் சரணடைந்தவர்களும், அவர்தம் உறவுகளால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களும், பாலஸ்தீனியர்களும்
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கோரிய போராட்டங்கள் இன்றைக்கும் வடக்கு, கிழக்கு பாகங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற அத்தனை அவல வடிவங்களும் பாலஸ்தீனத்தில் இடம்பெறுகின்றன. இலங்கையிடமிருந்து கற்றுக்கொண்ட போரியல் பாடங்களின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தங்களுக்குத் தேவையானளவுக்கு மக்களைக் கொன்றொழித்த பின்னர் இந்தப் போர் முடிவுக்கு வரும். மனிதர்களையெல்லாம் கொன்றொழித்த பின்னர் மனிதாபிமானப் போரை வென்றதாக இஸ்ரேலோடு நிற்கும் நாடுகள் அனைத்தும் இணைந்து அறிக்கை வெளியிடுவார்கள்.
ஆக ஈழத்தமிழர்களுக்கு இந்த உலகம் எதனை அளித்ததோ, அதனையே பாலஸ்தீனியர்களுக்கும் அளிக்கும். ஒரு பெரும் மானுட அவல நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஈழத்தமிழர்களும், பாலஸ்தீனியர்களும் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். அதனைத் தவிர வேறெதுவும் நடந்துவிடப்போவதில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 26 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.