தமிழீழ விடுதலைப்புலிகள் பாசிசவாதிகளா..! இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா..!
1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் நடந்து கொண்ட முறை சரியானதா? 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் அதாவது விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் செயற்பட்ட முறை நீதியானதா? இங்கே நீதி தவறியது யார் புலிகளா? இலங்கை அரசா? வன்முறையை முதலில் ஆரம்பித்தது யார? புலிகளா? இலங்கை அரசா? தமிழ் முற்போக்குவாதிகளுக்கும் தமிழ் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் புத்தி எங்கிருந்து பிறக்கிறது? பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்று பேசாமல் பாதிப்புக்கு உட்படுத்தியவன் பக்கம் நின்று நியாயம் கற்பிக்க முற்படுவது மாற்றுக் கருத்தா?
இலங்கை அரசு' என்ற கட்டமைப்புச் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டுவதாக கூறி மாற்றுக் கருத்தாளர்கள் சிலவேளை தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் கூடும். ஆனால் நீதி எங்கிருந்து தவறியது யாரால் தவறவிடப்பட்டது என்று மாற்றுக் கருத்தாளர்கள் எவரும் சிங்கள ஆட்சியாளர்களின் நெஞ்சை நோக்கிக் கைநீட்டிச் சொல்லவில்லை. மாறாக புலிகளை மாத்திரமே "பாசிஸ்ட்டுகள்" என்று மிகச் சுலபமாகக் கூறித் தங்களுக்கு ஆங்கில மொழி தெரியும் என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புலிகள் பாசிசவாதிகளா?
இறுதிப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு 2010 இல் வெளியிட்ட அறிக்கைகூட, இலங்கைத்தீவில் நீதி எங்கிருந்து தவறியது என்பதை ஒப்பிட்டளவில் (Comparatively) காண்பிக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளைப் பாசிஸ்ட்டுகள் என்று அந்த நிபுணர்குழு அறிக்கை முத்திரை குத்தவில்லை.
ஆகவே தமிழ்ச் சமூகத்தில் பிறந்து தங்களை மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள் என்று மார்தட்டுவோர் புலிகளை 'பாசிஸ்ட்' என்று எந்த அடிப்படையில் வரையறை (Definition) செய்ய முடியும்?
"கருத்து" "மாற்றுக் கருத்து" என பல கருத்தாடல்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு இனத்தின் அரசியல் விடுதலைக்கான நியாயத்தை கொச்சைப்படுத்துவது, மலினப்படுத்துவது போன்ற தீங்கிழைக்கும் கருத்துக்களை மாற்றுக் கருத்து என்று வரைவிலக்கணம் கொடுக்க முடியாது.
ஆகவே "கொலை" "அடக்குமுறை" என்ற ஒற்றைக் காரணத்தையும் ஒருபக்க, வாததத்தையும் மையமாகக் கொண்டு புலிகள் 'பாசிசவாதிகள' என கற்பிதம் செய்ய முற்படுகின்றமை "தமிழ்த்தேசியம்" மீதான வன்மமே.
தமிழ் இன அழிப்பு
ஓன்றில் இருந்து மற்றொரு வகையான முன்னேற்றத்துக்குரிய உரையாடல்களை மாற்றுக் கருத்து என்று பொருள்கொள்ள முடியும். குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் நின்று கொண்டு திருத்தம் அல்லது சீர்திருத்தம் செய்ய முற்படுவது மாற்றுக் கருத்தாகும். மற்றொரு கோணத்தில் சிந்திப்பதையும் குறிக்கும்.
இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளைத் தடுப்பதுதான் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடு என்று அர்த்தப்படும்.
ஆனால் இங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசுவோரின் மாற்றுக் கருத்து அல்லது மாற்றுச் சிந்தனை என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்துவதாகவுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்ப கற்பிதம் செய்வதையும் வழமையாகக் கொண்டுள்ளது.
ஆனால் 1958 இல் இருந்து 2009 மே வரையும் இலங்கை அரசு என்ற 'பௌத்த கட்டமைப்பு' நடத்திய தமிழ் இன அழிப்பு மற்றும் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் 1981 இல் யாழ் நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு நடந்தேறிய வன்முறைகள் பற்றியெல்லாம் இந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் துணிவுடன் வாய்திறப்பதில்லை?
இன்று மட்டக்களப்பு மேய்ச்சல் நிலமான மயிலத்தன மாதவன்மடுவில் சிங்களக் குடியேற்றத்துக்காகப் பசுமாடுகளைக் குண்டு வைத்து கொலை செய்கிறார்கள். பௌத்த குருமர் ஒத்துழைக்கின்றனர். இது மாற்றுக் கருத்தாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?
கொலைகளில் "நல்ல கொலை" "கெட்ட கொலை" என இரண்டு வகைகள் இல்லை. கொலை என்றால் அதனை யார் செய்தாலும் அது கொலைதான்.
ஆனால் இங்கே புலிகள் செய்ததுதான் கொலையென மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் கற்பிதம் செய்கின்றனர். இலங்கை அரசு செய்த தமிழ் இனக் கொலைகள் எல்லாம் நல்ல கொலைகள் என்ற தொனியில் நியாயம் கற்பிக்கப்படுகின்றது.
பாசிசம்
பாசிசம் என்பதற்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாசிசம் என்ற கொள்கையை உறுதியாக ஆதரித்திருக்கிறது. பாசிசம் தான் இந்தியாவில் 'இந்து இராஷ்டிரம்' அதாவது "இந்துத்துவா" என்ற கனவை நனவாக்கச் சரியான கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1931 இல் கருதியது.
இத்தாலியில் முசோலினி உருவாக்கியதைப் போல, இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்கி மக்களின் கருத்துரிமைகளைப் பறித்து இராணுவப் பயிற்சிக்கு இந்துக்களைத் தயார் செய்து இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்து.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான 'மூஞ்சே' 1931 இல் இத்தாலிக்குச் சென்று அங்கே முசோலினி நடத்திய பாசிசக் கல்லூரிகள் இராணுவக் கல்லூரிகள் அனைத்தையும் பார்வையிட்டிருக்கிறார்.
"இது ஒரு சிறப்பான கட்டமைப்பு. மக்களை தயார்படுத்தும் சிறப்பான முறை. இதேபோன்றுதான் இந்தியாவிலும் அமைக்க வேண்டும்" என்று அந்த கல்லூரிகளின் வருகைப் பதிவேடுகளில் மூஞ்சே குறிப்புகளை எழுதி வைத்துள்ளாதாக மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் கூறுகிறார்.
இந்தியாவில் இந்துத்துவா பற்றி பேசுகிற நிறுவனங்களின் வெளிநாட்டு தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்து "இந்திய தேசியத்திற்கும் நாஜி - பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு" (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஒரு ஆய்வு நூலை மார்சியோ காசலோரி 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.
எக்கனமிக் பொலிற்றிகல் வீக்லி (Economic and political weekly) என்ற ஆங்கிலப் வார இதழில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்திரண்டாம் திகதி இந்த நூல் குறித்த விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் தேசியக் கொடி ஏற்றப்படடது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1947 ஓகஸ்ட் பதினைந்தாம் திகதி "சுவஸ்திகா" கொடியை நாக்பூரில் ஏற்றியது. அப்போது காவிக் கொடியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தவில்லை.
இப் பின்புலத்திலேதான் நரேந்திர மோடியின் ஆட்சியை பாசிச ஆட்சி என்று தற்போது பலரும் விமர்சிக்கின்றனர். 2002 இல் மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஒப்பிட்டும் பேசுகின்றனர்.
பாசிசவாதத் தன்மையும் அரச பயங்கரவாதமும்
இங்கே நாசிசம் - பாசிசம் மட்டுமில்லாமல் ஜியோனிசம் (Zionism) என்ற சித்தாந்தம் பற்றியும் நோக்க வேண்டும். ஜியோனிசம் - யூதர்கள் சட்ட விரோதமாக பலஸ்தீனர்களிடமிருந்து அபகரித்து உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்கான மதம்.
"ஜியோனிசம்" என்ற சொற்றொடரை வியட்னாம் நாட்டைச் சேர்ந்த பிர்ன்பவும் (Nathan Birnbaum) என்ற யூதர் 1855 இல் உருவாக்கினார்.
இப்போது இஸ்ரேல் - பலஸ்தீன போரில் என்ன நடக்கிறது? போர், என்றால் போர் என்றுதான் இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் கமாஸ் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்கின்றன.
ஆகவே இந்த நாடுகள் பாசிசக் கொள்கையைத் பலஸ்தீன விவகாரத்தில் கையாளுகின்றன என்று அர்த்தப்படுத்த முடியுமா?
ஏன் 1983 இல் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈழத்தமிழ் போராளிகளை அழிக்கத் திட்டமிட்டபோது சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அன்று ஜே.ஆர் மார்தட்டினார் அல்லவா?
1990 இல் பிரேமதாச என்ன சொன்னார்? போர் என்றால் போர்தான். இராணுவ தேவைகளுக்காக சாக்குகளையும் உரப் பைகளையும் வீட்டுக்கு வீடு சென்று சிங்கள மக்கள் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டு போர்ப் பிரகடணம் செய்தார் அல்லவா?
சமதானத்துக்கான போர் என்று 1995 இல் சந்திரிகாவும் பகிரங்கமாகக் கூறினார் அல்லவா?
இனப்பிரச்சினையென ஒன்று இல்லை என்றும் புலிகள்தான் பிரச்சினை எனவும் 2005 இல் கூறிய மகிந்த ராஜபக்ச, தனது மகனையும் போருக்கு அனுப்பி போர் பிரகடனம் செய்தார் அல்லவா?
ஆகவே இலங்கை மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா. பிரித்தானியா போன்ற நாடுகளிடம் 'பாசிசவாதத் தன்மை' 'அரச பயங்கரவாதம்' ஒழிந்திருக்கின்றது என்பதை தமிழ் மாற்றுக் கருத்தாளர்களினால் துணிவுடன் வெளிப்படுத்த முடியுமா?
ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுகள் என்று அன்றில் இருந்து இன்றுவரையும் அதுவும் 2009 இற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களிலும் தொடராகச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றனர்.
ஆனால் இவர்கள் கூறும் பாசிசம் என்பது இத்தாலியில் இருந்த பாசிசத்தை போன்றதா என்ற கேள்வி எழுகிறது. பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பலருக்கும், அது பற்றிய போதிய விளக்கம் இல்லை.
மாறாக பாசிசம் மற்றும் பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தை இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியில் நடந்த நாசிசத்தை ஒப்பிடும் வகையிலேயே அமைந்துள்ளன.
இத்தாலியின் பாசிசம்
"பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்" (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார்.
இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை.
ஆகவே ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார்.
இத்தாலியில் இருந்த பாசிசத்தில் (Cooperativism) கோர்ப்பரேட்டிசம் எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார்.
ஆகவே இந்தப் புரிதல் இல்லாத ஒரு பின்னணியில் விடுதலை இயக்கங்கள் மீதான கண்டனத்தை வெளியிட வசதியான வார்த்தையாகப் பெரும்பாலும் "பாசிஸ்ட்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனப் பொருள்கொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். போன்ற சில அரசியல் கட்சிகள் பாசிசத்தில் உள்ள பல கருத்துகளோடு ஒத்துப்போகும் சூழலிலும், தங்களைப் பாசிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், பாசிசத்திற்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் பாசிசத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டே வாதிடுகின்றனர்.
இதற்கான துல்லியமான விளக்கம் என்ன என்பது பற்றி உலகில் இன்னும் விவாதம் தொடர்கிறது. ஆகவே மாற்றுக் கருத்தாளர்கள் மீதான கொலைகளை மாத்திரம் மதிப்பீடு செய்து பாசிஸ்ட் என்ற முடிவுக்கும் வர முடியாது. அப்படியானால் தற்கால நவீன அரச கட்டமைப்புகளுக்குள்ளும் பாசிஸ்ட் இருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும்.
2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் "புலிகள் பாசிஸ்ட்டுகள்" என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.