சீனத்தூதுவரின் வடபுல விஜயம் சீனாவின் பாய்ச்சல் தந்திரமும் இந்தியாவின் பதுங்கல் மந்திரமும்
சீனத்தூதுவர் கீ சென் ஹொங் 3 நாட்கள் வடபுல விஜயத்தை மேற்கொண்டு முடித்துவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.
அவருடன் அரசியல் அதிகாரி, தூதரகப்பாதுகாப்பு அதிகாரி என்று முக்கியஸ்தர்கள் சென்றுள்ளனர். அதாவது இராஜதந்திரம், அரசியல், இராணுவம் சார்ந்த மூவர் அங்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இடங்களும் முக்கியமானவையாகும்.
மன்னார் தாழ்வுப்பாட்டு கடற்படை இராணுவ முகாம், இராமர் அணை, நல்லூர் கோவில், யாழ் நூலகம், மன்னார் மீனவர்களுடனான சந்திப்பும், நிவாரணமும் என்ற வகையில் சீனத்தூதுவரின் விஜயம் அமைந்துள்ளது.
குறிப்பாக மன்னாரிலிருந்து 17 கடல் மைல்கள் பயணம் செய்து இராமர் அணைக்குச் சென்று 20 நிமிடங்கள் தரித்து நின்று அவதானிப்புகள் செய்துள்ளார்கள்.
ஏறத்தாழ இந்தியாவிலிருந்து 15 கி.மீ இலும் குறைவான இடைவெளியில்,கடற்படையின் உதவியுடன் படகில் இந்தியாவுக்கு அண்மையில் சென்று வந்துள்ளார்கள். பயணத்தின் போது நுணுக்கமான கமராக்கள் மூலம் இந்தியாவை அவதானிப்பதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், வட பகுதி மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை இருப்பதால் அதனைப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் அந்த மீனவர்களைச் சந்தித்து 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணங்கள், வலைகள் வழங்கியுள்ளார். இதன் மூலமாக மீனவர்களின் ஆதரவைத் தனதாக்க முனைந்துள்ளார். அத்துடன் நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
உண்மையில் சீனக்கம்யூனிசவாதிகள் கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகவாதிகள் ஆவர். ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்களின் பண்பாட்டினை மதிப்பதன் மூலம் அவர்களோடு உறவுகளை வளர்க்கத் தூதர் விரும்புகின்றார். யாழ் நூலகத்திற்கும் சென்று மடிக்கணணிகள், புத்தகங்களை வழங்கியுள்ளார். இதிலிருந்து படித்த மட்டங்களைக் கவர நினைத்துள்ளார். மேலும் இந்தத் தரிசிப்பு முடிவல்ல ஆரம்பம் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேயர் மணிவண்ணன் போன்ற அரசியல் முக்கியஸ்தர்களுடனும் அரசியல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் இவரது விஜயமானது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல், தந்திரோபாய , பூகோள, இராணுவத் தொடர்புகள் சார்ந்ததாக அமைந்துள்ளது.அடுத்ததாக வட பகுதி அபிவிருத்திக்காக பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்வதற்கு அல்லது கடனாக வழங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அந்த வகையில், தென்னிலங்கைச் சிங்கள மக்களைச் சீனாவின் செயல்பாடுகளால் கவர்ந்தது போல் வட பகுதி மக்களையும் சீனா கவர்ந்து கொள்வதற்குக் கங்கணம் கட்டுகின்றது.
யுத்தத்தால் அவலப்பட்டுப் பல இழப்புகளுடன் வறுமையில் வாடும் வடபகுதி மக்களைத் தனது பண பலத்தால் சீனா வளைத்துவிடுவதன் மூலம் தனது பூகோள ரீதியான அரசியல் காலூன்றலை வட பகுதியில் பதிக்க நினைக்கின்றது.
ஏற்கனவே வட பகுதித் தீவுகள் 3 இல் புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கம் என்ற அடிப்படையில் சீனா இந்தியாவுக்கு அண்மையில் காலூன்ற நினைத்தது. அதற்கு இலங்கை அரசு வாய்ப்பளித்தது. ஆனால் வட பகுதி மக்களின் எதிர்ப்புகள், தமிழ்த் தேசியக் கட்சிகளில் எதிர்ப்பு, இந்தியாவின் எதிர்ப்புக் காரணமாகச் சீன முதலீட்டாளாகள் அங்கு இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.
பூநகரி கெளதாரிமுனை கடல் அட்டை வளர்ப்பு விடயத்தில் ஈடுபட்ட சீனர்,அங்கு வாழும் மக்களதும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளதும் எதிர்ப்பைச் சந்தித்தனர். இந்த நிலையில் சீனாவின் இராஜதந்திரப் பாய்ச்சல் அணுகுமுறை இப்போது சீனத் தூதுவர் மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஆரம்பந்தான் முடிவல்ல என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். இவ்வாறு சீனா பாய்ச்சல் அணுகுமுறையில் தனது இராஜதந்திர வலையைத் தனது புவிசார் நல அரசியலையும், முத்து மாலை வியூகத்தையும் அனுசரித்து விரிக்கும் போது இந்தியா என்ன செய்கிறது என்பதுதான் எமது கேள்வியாக அமைகிறது.
இந்தியா பதுங்கல் நிலை மந்திரத்தோடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகிறது. இலங்கை யுத்தத்திற்குப் பிந்திய அரசியலைப் பார்க்கின்ற போது இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பு என்கின்ற இரண்டும் கேள்விக்குறிகளாக்கப்பட்டுள்ளன. சோனியா காந்தியின் தூரப் பார்வையற்ற நிபந்தனையற்ற யுத்த ஆதரவால் ஈழத்தமிழரின் பாதுகாப்பு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பும் பலவீனமாகியுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இராமர் பாலம் வரை அந்த ஆபத்து வந்து சூழ்ந்துள்ளது. சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப தந்திரோபாயங்களை இந்தியாவின் ஆன்மீக மந்திரோபாயங்களால் மட்டும் வெல்ல முடியாது.
அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவும் வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். அதற்கான வழி இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைச் சுயாட்சி சுயநிர்ணய அதிகாரத்துடன் தீர்க்க வழிகோலுவதாகும். தற்போது அமைச்சர் வாசுதேவ ஒரு விடயத்தினைக் கூறுகிறார்.
இலங்கையின் வட பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அபிவிருத்திக்கு இடமளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதாவது இந்தியாவின் வட புல செயற்பாடுகளைச் சீனாவின் மூலமாகக் கட்டுப்படுத்த நினைக்கிறார் போலத் தெரிகிறது.
அதாவது வடபுலத்தில் இந்தியா தமிழர்க்குச் சார்பான நிலையை எடுத்தால்,சீனா சிங்களர்க்குச் சாதகமாக செயற்படும் என்று அமைச்சர் நினைப்பது போல் தெரிகின்றது. மொத்தத்தில் தென்னிலங்கை மட்டுமல்ல வடக்கு - கிழக்கு இலங்கையும் வல்லரசுகளின் போட்டிக்களமாக மாறுவதை ஆட்சியாளர்கள் விரும்புவது போல் தெரிகிறது. தாமதம் ஆபத்தானது (Delay is dangerous ) என்பதை இந்தியா உணர்ந்தால் நல்லது. ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் பலமான சமஷ்டி சுயாட்சித் தீர்வே இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்க்கும் பாதுகாப்பாக அமையும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஶ்ரீநேசன்
தொடர்புடைய செய்திகள்
இது ஆரம்பப் புள்ளியே! வடக்கு மாகாணத்துடன் எங்கள் உறவு வலுப்பெறும் - சீன தூதுவர் (Video)
வேட்டி அணிந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற சீன தூதுவர்! (Video)
சீன தூதுவருக்கு அதியுச்ச இராணுவ பாதுகாப்பு! இந்தியாவுக்கு சொல்லும் செய்தி (Video)
சீனத் தூதுவரின் வருகைக்காக வவுனியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (Video)
இலங்கைக்கான சீன தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ் விஜயம் (Video)
you my like this video