இலங்கைக்கான சீன தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ் விஜயம் (Video)
சீன தூதுவர் இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கு வருகைதந்து பல இடங்களை பார்வையிட்டிருந்தார்.
அந்தவகையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு வருகைதந்து ஆளுநருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
அதன்பின்னர் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் உள்ள ஒல்லாந்தர் கால கோட்டையை ஆளுநரும், சீன தூதுவரும் பார்வையிட்டனர்.
இன்றைய ஆளுநருடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு சீன தூதுவர் கீசன்ஹொங்கினை கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்காமல் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
அதன் போது , அங்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியும் இருந்தார். அத்துடன் நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியுள்ளார்.
அதேவேளை யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள " இந்தியன் சென்ரர்" பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சீனாவின் இலங்கைக்கான துாதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான தூதரக அதிகாரிகள் குழு யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர்.
குறித்த விஜயத்தின் போது இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடமாகாணத்திற்காண விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலை வடமாகாண ஆளுநர் , யாழ். மாவட்ட செயலர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்திக்கவுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மீனவர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.