மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக கைதியை ஊசியால் குத்திய தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறை கைதியிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (07.01.2026) இரவு குறித்த கைதியை சோதனை செய்த மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, 128 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் போதைப் பொருள் மீட்பு
கொழும்பு - கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கைதி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, சக கைதி ஒருவரை ஊசியால் குத்தி தாக்கியுள்ளார்.
அதன் பின்னர், குறித்த கைதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், நீதவான் அவரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்து, சிறைச்சாலை பேருந்தில் ஏற்றப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேற்றுமுன் தினம் (07) கொண்டு வரப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கொண்டு வரப்பட்டவரை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்வதற்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது வரின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின் பின்னர், குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று(08) முன்னிலைப்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கூடத்தில் தடுத்து வைத்திருந்த போது அவரை பார்ப்பதற்காக வந்த உறவினர்கள் போதைப்பொருளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam