யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்
யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 53 வயதான நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், இரு இளைஞர்களை கைது செய்ததுடன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரையும் மீட்டு இருந்தனர்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி தம்மிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி வந்தமையால், அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்ளவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இரு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |