ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாளர்களின் விவகாரம்: பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள்
அண்மையில் இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் புனர்வாழ்வு பட்டியலில் இருப்பதாக நேர்காணலில் புன்சர அமரசிங்க வெளிப்படுத்தினார்.
குறித்த செய்தித் தொடர்பிலேயே கலாநிதி புன்சர அமரசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நேற்று (28) அழைக்கப்பட்டுள்ளார்.
தீவிர விசாரணைக்கு பின், அவரை காவலில் எடுக்க அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், அவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அவரின் கருத்துகளின் பின்னணியானது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் மறுவாழ்வு பற்றிய பரந்த பிரச்சினையை மையமாகக் கொண்டுள்ளது.
அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் புனர்வாழ்வு நிலை குறித்து கலாநிதி புன்சர அமரசிங்க வெளிப்படுத்தியிருப்பது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புனர்வாழ்வுத் திட்டங்களின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்புவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |