நாடு முழுவதும் சுமார் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சேதம்
இலங்கையில் நிலவிய கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக நாடு முழுவதும் சுமார் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த நிலையங்கள் குறித்த விபரங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சேதமடைந்தவற்றில் சில நிரப்பு நிலையங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டாலும், இன்னும் 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகம்
இருப்பினும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து மூடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் (8) முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குமார ஜயகொடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அவசரகால சூழ்நிலையில், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு அமைச்சு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.