யாழில் ஆரோக்கிய நகரம் செயற்திட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாணம் ஆரோக்கிய நகர திட்டத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ஆரோக்கியத்தின் பாதையில் விழிப்புணர்வு ஈருருளிப்பயணம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த விழிப்புணர்வு ஈருருளிப்பயணம் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் சுகநலனில் அக்கறை கொள்ளவேண்டு்ம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ். ஆரோக்கிய நகரம் செயற்திட்டம்
யாழ். ஆரோக்கிய நகரம் என்ற செயற்திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
அண்ணளவாக 10 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த விழிப்புணர்வு ஈருருளிப் பேரணியில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன் உட்பட பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆரோக்கிய நகரங்கள்
உலக நாடுகள் பலவற்றில் உலக வங்கி 'ஆரோக்கிய நகரங்கள்' என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தி கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியும் உள்ளது.
இதனடிப்படையில், தென் ஆசியாவிலேயே முதன் முறையாக யாழ்ப்பாண நகரம் தெரிவு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்தின் பங்காளிகளாக தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆர்வமுள்ள அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ். அரசாங்க அதிபரை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |