இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு - ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்விற்கு சமூக செயற்பாட்டாளர்களும் ஊடக சுதந்திர அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
லெப்டினன்ட் கர்னல் எரந்த ரதீஷ் பேரிஸ் என்பவர் பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்ததாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கையை
இந்த பதவி உயர்வுக்கு தாம் கடும் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதாகவும், 2010ஆம் ஆண்டு தனது கணவர் காணாமற்போன வழக்கில் பேரிஸ் பிரதிவாதியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல இராணுவ புலனாய்வுப் பிரீவு அதிகாரிகளில் லெப்டினன்ட் கர்னல் பேரிஸும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சட்டமா அதிபர் துறை, அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ததாகவும், அதில் கொலை குற்றச்சாட்டும் அடங்கும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளில், கடத்தல் சம்பவத்தில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அதிகாரிக்கு மூத்த பதவி வழங்கப்படுவது நீதித்துறை செயல்முறையை பாதிக்கக்கூடும் என சந்தியா எக்னெலிகொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிற ஒருவருக்கு உயர்ந்த பதவி வழங்கப்படுவது, சாட்சிகளை பாதிக்கவும், விசாரணை அதிகாரிகளை மனமுடைக்கவும், நீதியின் நடைமுறையை பலவீனப்படுத்தவும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது,” என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எக்னெலிகொட வழக்கில் பிரதிவாதியாக உள்ள ஓய்வு பெற்ற ஒரு மூத்த அதிகாரி, முக்கிய சாட்சியொருவரை மிரட்டியதாக கூறப்படும் மற்றொரு வழக்கும் தற்போது நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதவி உயர்வை சிவில் அமைப்புகளும் ஊடக சுதந்திர ஆதரவாளர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
கட்டாய காணாமற்போக்கு சம்பவங்களில் பொறுப்புணர்வு குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை இது சீர்குலைப்பதாகவும், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை பாதிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.