அசாத் மௌலானாவை கருணா - பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்திய டக்ளஸ்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தினால் (Trial-at-Bar) தண்டனை விதிக்கப்பட்ட மூவர், இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், சிறைச்சாலைக்குச் சென்று குறித்த மூன்று கைதிகளிடமும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு எட்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் நேற்று அனுமதி கோரினார்.
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான மேலும் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது, மேல் நீதிமன்றத்தினால் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட மில்ஹான், ரிஸ்கான் மற்றும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எதிர்பார்ப்பதாக இதன்போது திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
விசாரணை
பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உரையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் ஆயத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, தண்டனை பெற்ற மூவர் 'நாங்கள் சிறைக்குச் சென்றாலும், இதனுடன் தொடர்புடையவர்கள் இன்னும் வெளியே சுதந்திரமாக இருக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த கூற்று குறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும். தண்டனை பெற்ற இந்த மூன்று நபர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தின் முன் பகிரங்கமாக இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, 2026 அக்டோபர் 22 முதல் 2026 நவம்பர் 8 வரையிலான காலப்பகுதியில் சிறைச்சாலைக்குச் சென்று இந்த நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய எட்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோருகிறேன் எனப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் புலனாய்வாளர்கள் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் முக்கிய சாட்சியான அசாத் மௌலானாவை, கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகிய இரு தரப்பினருக்கும் டக்ளஸ் தேவானந்தாவே அறிமுகப்படுத்தினார் என்பதை உணர்த்தும் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
"அசாத் மௌலானாவை கருணா அம்மான் மற்றும் பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தியது டக்ளஸ் தேவானந்தாவே என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் முந்திரி கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய சங்கர் என்பவரை, அசாத் மௌலானா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் பணித்துள்ளார்.
எனினும், டக்ளஸ் தேவானந்தா இதனை மறுக்கிறார். நாங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி புலனாய்வாளர்களுக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பான விஷயங்களைக் கூட குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. அவரும் சட்டத்திற்கு உட்பட்டவரே. அதனைத் தொடர்ந்து சங்கர் என்ற நபரிடம் நாங்கள் வாக்குமூலம் பதிவு செய்தோம். அவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அவர் முன்னர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தவராவார்.
அசாத் மௌலானாவை கருணா குழுவிற்கு அறிமுகப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா தமக்கு பணித்ததாக அவர் குறிப்பிடுகிறார். அசாத் மௌலானா பிள்ளையானுடனும் தொடர்புகளைப் பேணி வந்தார். பின்னர், 2005 இல் சங்கர் அரசியலில் இருந்து விலகி, தனது முழு குடும்பமும் சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்வதற்கான விசாக்களைப் பெற்றார்.
சிலர் சுரேஷ் சல்லே மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கி அசாத் மௌலானா பொய்யான கூற்றுகளைத் தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், கனம் நீதிபதி அவர்களே, அவர் பொய்யான உரிமைகோரல்களைச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. 2005 மற்றும் 2006 காலப்பகுதியிலேயே அசாத் மௌலானா அரசியல் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டிருந்தார்." என்றும் தீபால் பீரிஸ் மன்றில் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு
விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கையளித்த பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரும் கூட, தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கு சுரேஷ் சல்லேயின் அறிவுறுத்தலின் பேரில் சில அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
"கனம் நீதிபதி அவர்களே, ராஜன் என்ற இராணுவத்துக்கு தகவல் வழங்குநர், இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய கோப்ரல் சுரங்க என்பவருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவரான இன்ஷாஃபின் மாமாவின் வீட்டைச் கண்காணித்து, வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்பதைக் கவனிக்குமாறு ராஜனுக்கு கோப்ரல் சுரங்க அறிவுறுத்தினார். ராஜன் தந்திரமாக அந்த வீட்டிற்குள் நுழைய முடிந்தது.
அங்கிருந்தபோது, அவர் புர்கா அணிந்த ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் சந்தித்தார். அவர் அவர்களுடன் பேசினார். அந்தப் பெண் தமிழில் பேசினார், ஆனால் ராஜன் கோப்ரல் சுரங்கவிடம் அவரது உச்சரிப்பு அந்தப் பகுதிக்கு உரியதாக இல்லாமல் மட்டக்களப்புப் பகுதியுடன் தொடர்புடையதாகத் தோன்றுவதாகத் தெரிவித்தார்.
ராஜன் அந்தப் பெண்ணின் தோற்றத்தையும் அவதானித்துள்ளார். அதைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்த பின்னர், சாரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. தான் கண்ட பெண் சாரா ஜாஸ்மின் தான் என ராஜன் அடையாளம் கண்டு இதனை கோப்ரல் சுரங்கவிடம் தெரிவித்தார். அதன்போது கோப்ரல் சுரங்க, அந்த விவகாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அதை மறந்துவிடுமாறும் அவரிடம் கூறியுள்ளார்.

"கனம் நீதிபதி அவர்களே, தாக்குதலுக்குப் பின்னர் கிடைத்த தகவல்கள் சரியாக விசாரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும், சுரேஷ் சலேயின் அறிவோடுதான் இது நடந்துள்ளது என்பதும் இந்த விடயத்தின் மூலம் மிகவும் தெளிவாகிறது." இதன்போது, கருணா அம்மான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதியாக பயண ஆவணங்களை வழங்கியதாகக் கூறப்படும் சூழ்நிலைகள் குறித்தும் நீதிமன்றம் மீண்டும் பரிசீலித்தது.
"சுரேஷ் சலே உட்பட இரண்டு புலனாய்வு அதிகாரிகள், கருணா அம்மான் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் செய்வதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு ஏற்பாடு செய்தனர். கருணா அம்மான் அங்கு சென்ற பிறகு, சலேயும் அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
எனினும், சலே இதனை மறுக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட சந்திப்பு நடந்த சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு, போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததற்காக கருணா அம்மான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். அந்த கடவுச்சீட்டு சுற்றாடல் அமைச்சின் முன்னாள் செயலாளரான துஷ்மந்த குணவர்தன என்பவரின் பெயரில் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்சமயம் அப்படி ஒரு நபர் இருந்தாரா என்பதைக் கூட உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் வெளிவிவகார அமைச்சிடமிருந்து பெறப்பட வேண்டும். மேலும், சலே ஒரு கடவுச்சீட்டு நிபுணர் ஆவார். அவரிடம் இரண்டு அல்லது மூன்று கடவுச்சீட்டுகள் உள்ளன“ என்றும் தீபால் பீரிஸ் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதன்போது குறிக்கிட்ட முன்னாள் அரச புலனாய்வுப் பிரதானி சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரரிடம் பல கடவுச்சீட்டுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டால், அதற்குரிய கடவுச்சீட்டு எண்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.
"எனது கட்சிக்காரர் கருணா அம்மானுக்கு கடவுச்சீட்டு வழங்கி வசதி செய்து கொடுத்ததாகக் கூறப்படும் காலத்தில், அவர் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றி வந்தார். அவ்வாறிருக்கையில் இலங்கையில் கடவுச்சீட்டுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்திருக்க முடியும்? இவை முற்றிலும் பொய் குற்றச்சாட்டுகள். எனது கட்சிக்காரரிடம் இதுவரை ஒரே ஒரு வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அந்த வாக்குமூலம் உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பானது கூட அல்ல. அது கருணா அம்மானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடவுச்சீட்டு பற்றியது." என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வாதப் பிரதி வாதங்களுடன் நேற்றைய விசாரணை அமர்வு முடிவுற்ற நிலையில், வழக்கு மீண்டும் நவம்பர் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது.
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam